இந்திய கடல் பகுதியில் ஊடுருவிய 3 சீன உளவு கப்பல்களால் பரபரப்பு
- ஒரு கப்பல் அந்தமான் தீவின் மேற்கு பகுதியில் சர்வதேச கடல் எல்லை அருகே நீண்ட நாட்களாக நின்று கொண்டிருக்கிறது.
- 3 உளவு கப்பல்களும் இந்தியாவின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவின் முக்கிய ராணுவ நிலைகளை உளவு பார்க்க சீனா பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென் இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தொழில் திட்டங்களை சீன கப்பல்கள் இந்திய பெருங்கடலில் இருந்த படியே நவீன கருவிகள் மூலம் உளவு பார்ப்பது அடிக்கடி நடக்கிறது.
அந்த வகையில் தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் 3 சீன உளவு கப்பல்கள் ஊடுருவி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதில் ஒரு கப்பல் அந்தமான் தீவின் மேற்கு பகுதியில் சர்வதேச கடல் எல்லை அருகே நீண்ட நாட்களாக நின்று கொண்டிருக்கிறது.
அந்த கப்பல் அந்தமானில் உள்ள இந்திய கடற்படை கப்பல்களின் நகர்வுகளை கண்காணிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அந்த உளவு கப்பல் மிகப்பெரிய ஒத்திகை ஒன்றை நடத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.
மற்றொரு உளவு கப்பல் மாலத்தீவு அருகே இருக்கிறது. 3-வது உளவு கப்பல் மொரீசியஸ் தீவு அருகே சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த 3 உளவு கப்பல்களும் இந்தியாவின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது.