இந்தியா

உலக அழகி போட்டி: ரூ.2.20 லட்சம் மதிப்பிலான சிவப்பு நிற பட்டுச்சேலை அணிந்து பங்கேற்ற சினி ஷெட்டி

Published On 2024-02-21 05:39 GMT   |   Update On 2024-02-21 05:39 GMT
  • உலக அழகி போட்டியில் சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
  • ஒவ்வொரு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு அழகிகள் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

புதுடெல்லி:

இந்த ஆண்டு உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் மார்ச் 9-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியுடன் உலக அழகி போட்டி முடிவடைகிறது.

27 வருடங்களுக்கு பின்னர், உலக அழகி போட்டி இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதனால் உலகம் முழுவதும் உள்ள விளம்பர நிறுவனங்கள், மாடல் உலகின் ஜாம்பவான்கள், தொழிலதிபர்கள் இந்தியாவில் குவிந்துள்ளனர். அழகி போட்டியில் ஜெயிப்பவர்கள், கலந்து கொள்பவர்களை தங்கள் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்ய இப்போதில் இருந்தே விளம்பர நிறுவனங்கள் போட்டியிட தொடங்கியுள்ளன.

இந்த உலக அழகி போட்டியில் சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒரு மாத காலம் இந்தியாவின் பல நகரங்களில் உலக அழகியை தேர்ந்தெடுக்கும் பல்வேறு போட்டிகள் நடக்கவுள்ளன. வெறும் அழகினால் மட்டுமின்றி, திறமை, புத்திசாலித்தனம் என அனைத்திலும் சிறந்த ஒருவரை இந்த போட்டியின் மூலம் உலக அழகியாக தேர்ந்தெடுக்கின்றனர்.

ஒவ்வொரு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு அழகிகள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன் தொடக்க நிகழ்ச்சி புதுடெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் தங்கள் நாட்டு பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் உலக அழகி போட்டியில் பங்கேற்கும் சினி ஷெட்டி சிவப்பு நிற பனாரஸ் பட்டுப்புடவை அணிந்து காட்சியளித்தார். அந்த படத்தை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் "சேலை நமது கலாச்சாரத்தின் வளமான வரலாற்றையும், நமது அடையாளத்தின் துணியை நெசவு செய்யும் ஆழமான வேரூன்றிய மரபுகளையும் குறிக்கிறது," என்றும் அதுவே சேலையை தேர்வு செய்ததற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News