சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைப்பு
- இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
அமராவதி:
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து கடந்த ஜனவரி 1-ந்தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்டம் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பயனாளர்களுக்கு சங்கராந்தி பண்டிகை தொகுப்பை வழங்கினார். சந்திரபாபு நாயுடு கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறிய பின் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற இரண்டு பொதுக்கூட்டங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கே எஸ் ஜவஹர் ரெட்டி பிறப்பித்த உத்தரவில், ஆந்திரப் பிரதேச ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி பி சேஷசயனா ரெட்டி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாதத்தில் அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு விசாரணை கமிஷன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.