வங்கி மோசடி வழக்கு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரூ.29 கோடி சொத்துக்கள் முடக்கம்
- மோசடி தொடர்பாக 55 நிறுவனங்களின் மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
- பொரத்திசேரி கட்சி அலுவலகத்தின் மாவட்ட செயலாளர் வர்கீஸ் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 5 சென்ட் நிலமும் முடக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது கருவண்ணூர் கூட்டுறவு வங்கி. இந்த வங்கியில் கடந்த 2010-ம் ஆண்டு கோடிக்கணக்கில் பணம் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த வங்கியில் ரூ.150 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அநத மோசடி தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ரூ.300 கோடிக்கும் மேல் மோசடி நடந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து கடன் பெற்று பணம் மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. பணம் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர்கள்-குழு உறுப்பினர்கள் மற்றும் வங்கியை நிர்வகிக்கும் நபர்களின் அறிவுறுத்தலின்பேரில் வங்கி மேலாளரால் முகவர்கள் மூலம் ரொக்கமாக பலருக்கு கடன் வழங்கி மோசடி செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் மந்திரி சபையில் இருந்த தற்போதைய எம்.எல்.ஏ., கவுன்சிலர், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இந்த மோசடி தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. மோசடி தொடர்பாக 55 நிறுவனங்களின் மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் கருவண்ணூர் கூட்டுறவு வங்கி மோசடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமலாக்க இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது. அவர்கள் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் வங்கியில் மோசடி செய்யப்பட்ட பணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ளது தெரிய வந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அவற்றில் கருவண்ணூர் கூட்டுறவு வங்கியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி கணக்குகளும், திருச்சூர் மாவட்ட குழுவின் நிலையான வைப்பு கணக்குகளும், மேலும் 3 வங்கிகளில் கட்சியின் சேமிப்பு கணக்குகளும் அடங்கும்.
பொரத்திசேரி கட்சி அலுவலகத்தின் மாவட்ட செயலாளர் வர்கீஸ் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 5 சென்ட் நிலமும் முடக்கப்பட்டது. இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான ரூ.29கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக பல நபர்களின் வங்கி கணக்குள் மற்றும் அசையா சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ரூ.87.85 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கருவண்ணூர் கூட்டுறவு வங்கி பணம் மோசடி வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.