என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கேரளா
- அர்ஜென்டினா அணி அடுத்த ஆண்டு(2025) கேரளாவிற்கு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது
- கால்பந்தின் மீதான நமது அன்பைக் கொண்டாட தயாராகுவோம்
கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் பிரபல கால்பந்து வீரர் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடும் என அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் மேற்பார்வையில் இந்த போட்டி நடத்தப்படும். இந்த உயர்தர போட்டிக்கான அனைத்து நிதி உதவிகளும் மாநில வணிகர்களால் வழங்கப்படும். மெஸ்சி கலந்து கொள்ளும் சர்வதேச போட்டியை நடத்தும் திறன் கேரளாவிற்கு உள்ளது என மந்திரி நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "FIFA உலகக் கோப்பை சாம்பியன் அர்ஜென்டினா அணி அடுத்த ஆண்டு(2025) கேரளாவிற்கு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது கேரளா வரலாறு படைக்க உள்ளது. மாநில அரசின் முயற்சிகள் காரணமாக இந்த கனவு நனவாகி வருகிறது. சாம்பியன்களை வரவேற்கவும், கால்பந்தின் மீதான நமது அன்பைக் கொண்டாடவும் தயாராகுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
Kerala is set to make history as FIFA World Cup Champions Argentina are expected to visit next year! This dream is becoming a reality thanks to the State Government's efforts and the support of @AFASeleccionEN. Let's gear up to welcome the champions and celebrate our love for… pic.twitter.com/gT1yBrjJ9b
— Pinarayi Vijayan (@pinarayivijayan) November 20, 2024
- பஸ்சின் முன் நின்றும், அமர்ந்தும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
- பேருந்து எனது வாழ்க்கையில் நிலையான ஒன்று.
இளமைக்காலத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வரக்கூடிய காதல் தனித்துவமானதாக இருக்கும். அது அவர்களை ஒருவித பரவசத்தில் ஆழ்த்திவிடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
காதல் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்றாலும் மனிதப் பிறவியான நாம் புனிதமானதாக கருதும் ஒன்றாக இருக்கிறது.
இப்படிப்பட்ட காதல் சிலருக்கு பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் போதோ, சிலருக்கு பணிபுரியும் போது கிடைக்கும் நட்பின் மூலமாகவே கிடைக்கிறது.
காதலில் உண்மையாக இருந்து திருமண வாழ்வில் இணைபவர்கள், தங்களின் காதல் உருவாக காரணமாக இருந்த விஷயத்தை என்றும் மறப்பதில்லை.
தாங்கள் முதன்முதலாக சந்தித்த இடம் உள்ளிட்டவற்றை மீண்டும் பார்க்கும் போது சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.
செல்போன்களின் பயன்பாடு, போட்டோ-சூட் கலாச்சாரம் அதிகமாக இருக்கும் தற்போதைய நவநாகரீக காலத்தில் திருமணமான பிறகு முன்பு சென்றுவந்த இடங்களுக்கெல்லாம் சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களின் பொக்கிஷமாக வைத்துக்கொள்வார்கள்.
அப்படித்தான் ஒரு காதல் ஜோடி, தங்களது காதலுக்கு அடித்தளமாக இருந்த அரசு பஸ்சை திருமணமான கையோடு சென்று பார்த்திருக்கிறார்கள்.
மேலும் அந்த பஸ்சின் முன் நின்றும், உள்ளே அமர்ந்தும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள். கேரள மாநிலத்தில் நடந்த அந்த உணர்வுப் பூர்வமான நிகழ்வு பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மாறநல்லூர் சீனிவிளை பகுதியை சேர்ந்த நித்யானந்தன்-கீதாமணி தம்பதியரின் மகன் அமல். இவரது ஊருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பஸ் வசதி கிடையாது.
அப்போது மாணவ பருவத்தில் இருந்த அமல், தனது ஊருக்கு அரசு பஸ்சை இயக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.
அனால் அவரது மனு கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருந்தது. இருந்தாலும் எப்படியாவது தனது ஊருக்கு பஸ்சை பெற்றுவிடவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்த அமல், தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தபடி இருந்தார்.
அதன் பலனாக அவரது ஊருக்கு பஸ் வசதியை அரசு ஏற்படுத்தி கொடுத்தது. அனப்பாடு-சீனிவிளை வழித்தடத்தில் ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனால் சீனிவிளை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது. அந்த பஸ் சீனிவிளை பகுதி மக்களின் உயிர்த்துடிப்பாக மாறியது.
அந்த அளவுக்கு ஊர் மக்கள் அந்த பஸ்சை பயன்படுத்தி வந்தனர். அவர்களுடன் வாலிபர் அமலும் தினமும் கல்லூரிக்கு அந்த பஸ்சிலேயை சென்று வந்தார். தனது விடாமுயற்சியால் கிடைத்த அந்த பஸ்சில் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் பயணித்து வந்தார்.
அப்போது தான் அபிஜிதாவை அவர் முதன் முதலாக பார்த்தார். அவரை பார்த்தவுடன் அமலுக்கு பிடித்துவிட்டது. பஸ் பயணத்தால் அவர்களுக்குள் கிடைத்த நட்பு, பின்பு காதலாக மாறியது. இந்த நிலையில் அமலுக்கு வெளியூரில் வேலை கிடைத்தது.
வேலைக்கும் அந்த பஸ்சிலேயே தினமும் சென்றுவந்தார். அதே பஸ்சில் அபிஜிதாவும் தினமும் பயணித்தார். இதனால் அவர்கள் இருவரும் தினமும் சந்தித்துக் கொண்டனர். காதலில் உறுதியாக இருந்த அவர்கள், திருமண வாழ்வில் இணைய முடிவு செய்தனர்.
அவர்களது காதலுக்கு பெற்றோரும் சம்மதித்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. தங்களை அறிமுகப்படுத்திய, தங்களுக்கிடையே காதல் உருவாக காரணமாக இருந்த அரசு போக்குவரத்து கழக பஸ்சில் திருமண கோலத்தில் பயணிக்க ஆசைப்பட்டனர்.
இதனால் திருமணம் முடிந்த கையோடு அவர்கள் இருவரும் கழுத்தில் மாலையோடு பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களுக்குள் அறிமுகத்தை ஏற்படுத்திய அரசு பஸ்சின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும் காதலித்த போது தாங்கள் பயணித்ததை போன்று, பஸ்சுக்குள் அமர்ந்து பயணித்தனர்.
புதுமண ஜோடியின் இந்த செயல் சீனிவிளை பகுதி மக்களை மட்டுமின்றி, அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட அரசு பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரையும் ஆச்சரியமடையச்செய்தது.
இது குறித்து அமல் கூறும்போது, "இந்த பேருந்து எனது வாழ்க்கையில் நிலையான ஒன்று. நான் நினைத்துப் பார்க்காத வழிகளில் எனது பயணத்தை வடிவமைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பேருந்து மக்களுக்கு மிக முக்கியமான பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது என்பதே சரியானதாகும்" என்றார்.
- சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு.
- நடை சாத்தப்பட்டிருந்தாலும் 18-ம் படியில் ஏற அனுமதி
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர்.
பக்தர்கள் கூட்ட நெரி சலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது.
அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அது மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னி தானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது.
மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்படுவதால் பதினெட்டாம்படி உள்ளிட்ட சன்னிதான பகுதியில் கூட்ட நெரிசல் என்பது இல்லை.
மேலும் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் வருகை அதிகரித்தபடி இருக்கிறது. இன்று காலை சபரிமலை பகுதியில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத் தாமல் பக்தர்கள் மலை யேறிச் சென்றனர். மேலும் பதினெட்டாம் படி ஏறுவ தற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் கொட்டும் மழையில் நனைந்தபடி நின்றனர்.
இந்தநிலையில் சபரி மலையில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவை 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகி றார்கள்.
ஆனால் அதற்கு குறை வாகவே தினமும் பக்தர்கள் வருகிறார்கள். ஸ்பாட் புக்கிங் முறையில் தற்போது வரை அதிகபட்சமாக ஒரு நாளில் 5,982 பேரே பதிவு செய்து சன்னிதானத்துக்கு சென்றிருக்கிறார்கள்.
பதினெட்டாம்படியில் பக்தர்களை விரைவாக ஏறச் செய்தல், தரிசன நேரத்தை நீட்டித்தல் போன்ற நடவடிக்கைகளால் பக்தர்கள் நெரிசலில்லாத சுமூகமாக தரிசனத்தை பெற முடிந்தபோதிலும், பக்தர்களின் வருகை எதிர் பார்த்த அளவுக்கு இல்லை.
இதன் காரணமாக சபரி மலைக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதன் மூலம் கிடைக்கும் வருவாய் பாதித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
மேலும் அரவணை மற்றும் அப்பம் உள்ளிட்ட பிரசாத விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என தெரிகிறது.
இந்த காரணங்களுக்காக பக்தர்களின் வருகையை அதிகப்படுத்த ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக அதிகரிக்கவும், ஸ்பாட் புக்கிங்கை தொடர்ந்து 10 ஆயிரமாக தொடரவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
- பாஸ்போர்ட்டை கோர்ட்டில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
- நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் வழங்குவது, இதுபோன்ற மற்ற வழக்குகளை பாதிக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு வாதிட்டது.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் சித்திக். இவர் பாலியல் பலாத்தகாரம் செய்ததாக நடிகை ஒருவர் புகார் செய்தார். அதன்பேரில் நடிகர் சித்திக் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கேட்டு தாக்கல் செய்த மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நடிகர் சித்திக் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், சித்திக்கிற்கு தற்காலிக ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நடிகர் சித்திக் ஜாமின் மனு மீதான விசாரணை நீதிபதிகள் பேலா திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர். நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் வழங்குவது, இதுபோன்ற மற்ற வழக்குகளை பாதிக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு வாதிட்டது. ஆனால் அந்த வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
- கேரள ஐகோர்ட்டில் நடந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி திறந்துவைத்த நிலையில் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
- ஜாமின் பெறுவதற்கான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நாளை(20-ந்தேதி) முதல் செயல்பட தொடங்குகிறது. நாட்டிலேயே முதல் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றமான இதனை, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள ஐகோர்ட்டில் நடந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி திறந்துவைத்தநிலையில் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
இந்த நீதிமன்றத்தில் மக்கள் 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யலாம். ஜாமின் பெற கட்சிக்காரர்கள் மற்றும் ஜாமின்தாரர்கள் உள்ளிட்டவர்கள் ஆஜராக தேவையில்லை. அவர்கள் ஜாமின் பெறுவதற்கான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும்.
- அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது.
- மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அது மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னிதானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நடைமுறை பக்தர்கள் நெரிசலின்றி சென்று சாமி தரிசனம் செய்வற்கு உதவியாக இருக்கிறது.
அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது. மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட நேரத்தில் வலிய நடை பந்தலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதன்பிறகு கூட்டம் குறைந்தது. நடைப்பந்தலில் பக்தர்கள் காத்திருக்கும் போது அவர்களுக்கு பிஸ்கட், சுக்கு தண்ணீர் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்படுகிறது. பதினெட்டாம் படியிலும் பயிற்சி பெற்ற போலீசார் நியமிக்கப்பட்டு இருப்பதால், பக்தர்களை விரைவாக படியில் ஏற்றி விடப்படுகிறார்கள்.
அது மட்டுமின்றி தற்போது கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பக்தர்கள் இருமுடி கட்டுடன் படியேறாமல் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு இருக்கிறது.
நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் படியேறும் பக்தர்கள், நடை திறக்கப்பட்டதும் சாமி தரிசனம் செய்வதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
வருகிற நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் அதற்கு தகுந்தாற்போல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்றைய தினம் பூஜைகள் எதுவும் நடக்காவிட்டாலும், அன்றைய தினமே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அன்று முதல் நேற்று(18-ந்தேதி) மாலை வரையிலான 4 நாட்களில் 2.26லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.
- ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் கார் ஒன்று தடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
- போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
கேரளா மாநிலம் திருச்சூரில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் கார் ஒன்று தடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொடர்ந்து சைரன் சத்தம் எழுப்பியபோதும் கார் ஓட்டுநர் திரும்பத் திரும்ப ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் தடுத்தார்.
ஆம்புலன்சில் இருந்த மருத்துவ பணியாளர்கள் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், ஆம்புலன்சை தடுத்த நபரின் ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்து போலீசார் ரத்து செய்தனர்.
மேலும் அந்த நபருக்கு போக்குவரத்து ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
The Kerala Police took strict action against a car owner who blocked an ambulance from overtaking! They imposed a 2.5 lakh fine, suspended his driving license for 25 years, and personally delivered the challan to his home! Such firm measures remind us of the importance of… pic.twitter.com/VLMeawlXqh
— Tahir Peerzada (@TahirPeerzada_) November 17, 2024
- யாத்திரையின்போது தவறாமல் பயன்படுத்தப்படும் மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.
- யாத்திரையின்போது வெதுவெதுப்பான நீரை மட்டுமே அருந்த வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்(16-ந்தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமத்துக்கு உள்ளாகாமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்திருக்கிறது. அதன்படி அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரை என தினமும் 18 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை யாத்திரை வரக்கூடிய பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தேவசம் போர்டு வெளியிட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது:-
* சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாத்திரையின்போது மயக்கம் அடைந்தால், பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவ உதவியை பெற தாமதிக்க வேண்டாம்.
* யாத்திரையின்போது தவறாமல் பயன்படுத்தப்படும் மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும். பக்தர்கள் ஏற்கனவே ஏதேனும் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால், பயணத்தின்போது உரிய மருந்துகள் மற்றும் மருந்துச் சீட்டுகளை உங்களுடன் வைத்திருக்கவும்.
* சபரிமலைக்கு ஒரே நேரத்தில் நடந்து செல்வது சிரமமாக இருக்கும். எனவே யாத்திரை செல்லும் முன் நடைபயிற்சி மற்றும் சில உடற்பயிற்சிகளை பக்தர்கள் மேற்கொள்வது நல்லது.
* உங்களுக்கு உடல் தகுதி இல்லையென்றால் மெதுவாக மலை ஏறுங்கள். தேவையான இடங்களில் நின்று ஓய்வெடுக்கவும். நீலிமலை பாதைக்கு பதிலாக சுவாமி ஐயப்பன் சாலையை தேர்வு செய்வது நல்லது. சாப்பிட்ட உடன் மலை ஏறக்கூடாது.
* நீலிமலை, பம்பை, அப்பாச்சிமேடு மற்றும் சன்னிதானத்தில் செயல்படும் மருத்துமனைகள் இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் போன்ற சேவைகளையும் வழங்குகின்றன.
* யாரையேனும் பாம்பு கடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சபரிமலையில் உள்ள சுகாதார மையங்களிலும் ஆன்டிவென் மற்றும் சிகிச்சைகள் கிடைக்கும்.
* யாத்திரையின்போது வெதுவெதுப்பான நீரை மட்டுமே அருந்த வேண்டும். உணவை கையாளும் முன் கைகளை நன்றாக கழுவவும். மூடி வைக்காத உணவை உண்ணக்கூடாது.
* பொது இடங்களில் மலம் கழிக்க வேண்டாம். கழிப்பறைகளை பயன்படுத்துங்கள். பின்னர் சோப்பை பயன்படுத்தி கைகளை நன்கு கழுவவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.
- ஒரு நாளைக்கு 2 தொடர்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்.
- தவறான வார்த்தைகளை தடை செய்யவேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மகளிர் ஆணையம் திருவனந்தபுரம், மலப்புரம், கோட்டயம் ஆகிய மாவட் டங்களில் 13 முதல் 19 வயது டைய இளைஞர்களிடம் தொலைக்காட்சி சீரியல்கள் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் 43 சதவீதத்தினர் சீரியல்கள் தவறான செய்திகளை தெரிவிப்பதாக கூறியிருக்கின்றனர்.
மேலும் 57 சதவீதத்தினர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கருப்பொருள் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.
இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் ஒழுக்கக் கேடான அல்லது எதிர்மறை கதாபாத்திரங்களை பின்பற்றுவதும் தெரிய வந்திருக்கிறது.
ஆகவே மலையாள தொலைக்காட்சி தொடர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களை தடை செய்யவேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
இது தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ள விஷயங்கள் தொடர்பாக விவரங்கள் வருமாறு:-
தொலைக்காட்சிகளில் தினசரி ஒளிபரப்பாகும் நீண்ட கால மெகா சீரியல்களை நிறுத்த வேண்டும். ஒரு தொடரின் எபிசோட்களின் எண்ணிக்கை 20 முதல் 30 வரை இருக்குமாறு குறைக்க வேண்டும்.
ஒரு தொலைக்காட்சி ஒரு நாளைக்கு 2 தொடர்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும். சீரியல்கள் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு அவற்றை முறையான தணிக்கை செய்யப்பட வேண்டும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆய்வு செய்வதற்கு தற்போதுள்ள திரைப்பட தணிக்கை வாரியம் அல்லது புதிய சிறப்பு வாரியம் பொறுப் பேற்க வேண்டும்.
இளைய பார்வை யாளர்கள் பார்க்க பொருத்த மானதாக இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். பல சீரியல்களின் உள்ளடக்கம் குடும்பங்கள் மற்றம் குழந்தைகளை எதிர்மறையாக பாதிக்கும்.
கருப்பொருள் பெரும்பாலும் உண்மைத்தன்மையை கொண்டிருக்கவில்லை. இது இளம் பார்வையாளர்களிடையே தீங்கு விளைவிக்கும் சாயல்களுக்கு வழி வகுக்கும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தவறான வார்த்தைகளை தடை செய்யவேண்டும். பெண்கள் இழிவாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். ஆபாசமான உள்ளடக்கம் பரவுவதை தடுக்க கடுமையான விதி முறைகளை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
- பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
- கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதற்கிடையே சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சபரிமலை சீசனையொட்டி இந்த ஆண்டு ஆன்லைன் தரிசன முன்பதிவு முறையில் செய்யப்பட்ட நவீன மாற்றங்கள் காரணமாக பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,800 பக்தர்களுக்கு குறையாமல் தரிசனம் செய்கிறார்கள். 18-ம் படியில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசார் 15 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றப்படுகிறார்கள். அதாவது 15 நிமிடங்களுக்கு பின் ஓய்வு அளிக்கப்படுகிறது. இதனால் 18-ம் படியில் அதிக அளவில் பக்தர்கள் ஏற்றி விடப்படுகிறார்கள்.
சிரமமின்றி தரிசனம் செய்ய பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு வலியநடை பந்தலில் தனிவழி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் தரிசனம் முடிந்து மலை இறங்கும் பக்தர்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் கடந்த ஆண்டு வரை தனியார் நிறுவனத்திடம் இருந்து களபாபிஷேகத்திற்கான சந்தனம் வாங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு சந்தனத்தை அரைக்க 3 அரவை எந்திரங்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த எந்திரங்கள் மூலம் தற்போது சந்தனம் அரைக்கப்பட்டு களபாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சபரிமலையில் ஏற்கனவே 40 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது தினமும் 1 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீடுகள் மற்றும் பக்தர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள்.
- குருவா கும்பலை சேர்ந்த ஒருவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் ஏராளமான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து தரிசனம் செய்வார்கள்.
இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு கும்பல் பக்தர்களிடம் மட்டுமின்றி கேரளாவின் பல பகுதிகளிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. குருவா கும்பல் என போலீசாரால் அழைக்கப்படும் இந்த கும்பல், இந்த ஆண்டும் கேரளாவில் நடமாட தொடங்கி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ஆலப்புழா சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மதுபாபு கூறியதாவது:-
சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குருவா கும்பல் தற்போது ஆலப்புழாவில் நடமாடி வருகிறது. இவர்களை போலீசார் பார்த்துள்ளனர். அந்த கும்பலின் நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கும்பல் அம்பலப்புழா, காயம்குளம் போன்ற ரெயில் நிலையங்களுக்கு அருகில் தங்கி சிறு குழுக்களாக பிரிந்து சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இவர்கள் பகலில் உளவுப் பணிகளை செய்து சாத்தியமான இலக்குகளை கண்காணிப்பார்கள்.
பின்னர் வீடுகள் மற்றும் பக்தர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் குருவா கும்பலை சேர்ந்த ஒருவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் என தெரியவந்துள்ளது.
- உடல் நலக்குறைவால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த மித்ரன் காலமானார்.
- இந்திரா காந்தி, ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களின் ஜோதிடராக இவர் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருப்பணித்துறை ஈருரில் உள்ள ஏலப்பிரக்கொடத்து மனை பகுதியை சேர்ந்தவர் மித்ரன் நம்பூதிரிபாடு, பிரபல ஜோதிடர்.
உடல் நலக்குறைவால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த மித்ரன் நேற்று காலமானார். அவருக்கு வயது 95.
இந்திரா காந்தி, ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களின் ஜோதிடராக இவர் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஆந்திர அரசின் அர்ஷ ஞான சரஸ்வதி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்