முன்னாள் முதல்வர் குறித்து இந்நாள் முதல்வர் கருத்து - விமர்சிக்கும் பா.ஜ.க.
- 64 இடங்களில் வென்று காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியமைத்தது
- ஒரு முதல்வர் இவ்வாறு பேசுவது கவலை அளிக்கிறது என்றார் அஷ்வினி
கடந்த நவம்பர் மாதம், தெலுங்கானா சட்டசபைக்கான 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியாகியது.
தேர்தல் முடிவுகளின்படி, இந்திய தேசிய காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தெலுங்கான மாநிலம் உருவானதிலிருந்து இரு முறை முதல்வராக இருந்த பி.ஆர்.எஸ். (பாரதிய ராஷ்டிர சமிதி) கட்சியின் தலைவர் கே.சி.ஆர். (கே. சந்திரசேகர் ராவ்) தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரேவந்த் ரெட்டி முதல்வராக அக்கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய ரேவந்த் ரெட்டியிடம் முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். குறித்து கேட்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசும் போது, "எனது மரபணு (டி.என்.ஏ.) தெலுங்கானாவை சேர்ந்தது. ஆனால், சந்திரசேகர் ராவ், பீகாரிலிருந்து விஜயநகரம் வந்து அங்கிருந்து தெலுங்கானாவிற்கு வந்தவர். பீகார் டி.என்.ஏ.வை விட தெலுங்கானா டி.என்.ஏ. சிறப்பு வாய்ந்தது" என பொருள்பட கூறினார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சிற்கு பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் அஷ்வினி சவ்பே (Ashwini Choubey) கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
காங்கிரஸ் தலைவர்கள் அசுத்த அரசியலில் ஈடுபடுகின்றனர். ஒரு முதல்வரிடமிருந்து இத்தகைய கருத்து வருவது துரதிர்ஷ்டவசமானது மட்டுமின்றி கவலையளிப்பதும் கூட. பீகார் டி.என்.ஏ. சிறப்பானதுதான். இது குறித்து பதிலளிக்க வேண்டிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மவுனம் காத்து வருவது ஏன் என தெரியவில்லை. பொதுமக்கள் தக்க பதிலளிப்பார்கள்.
இவ்வாறு அஷ்வினி சவ்பே கூறினார்.
அஷ்வினியை போன்று பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான ரவிசங்கர் பிரசாத் ரேவந்த் ரெட்டியின் கருத்தை, "பொறுப்பற்ற, வெட்கக்கேடான, நாட்டு மக்களை பிரிக்க முயற்சிக்கும் கருத்து" என விமர்சித்துள்ளார்.
ரேவந்த் ரெட்டியின் கருத்திற்கு பல பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.