மகாராஷ்டிரத்தில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து- 3 தொழிலாளர்கள் பலி
- தொழிற்சாலை விபத்தில் 12 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
- சோடியம் சல்பேட்டை அம்மோனியாவுடன் கலக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது தான் இந்த விபத்து நடந்துள்ளது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் போய்சர் நகரில் ஒரு ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஜவுளித்தொழிலில் பயன்படுத்தப்படும் காமாஅமிலம் தயாரிக்கும் பிரிவில் நேற்று மாலை 4.20 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் ஆலையின் மேற்கூரை சேதமடைந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிய 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் பலியான 3 தொழிலாளர்கள் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் சோடியம் சல்பேட்டை அம்மோனியாவுடன் கலக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது தான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.