இந்துக்களின் வலி மோகன் பகவத்திற்கு புரியவில்லை - சங்கராச்சாரியார் விமர்சனம்
- ராமர் கோவில் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம், அது கட்டப்பட வேண்டும் என்று இந்துக்கள் கருதினார்கள்
- இந்துக்களின் தலைவராவதற்காக சிலர் இந்த பிரச்சனைகளை எழுப்புவதாக மோகன் பகவத் கூறுகிறார்.
இந்து ஆன்மிக சேவை அமைப்பு சார்பாக இந்து சேவா மஹோத்சவ் நிகழ்ச்சி புனேவில் தொடங்கியது. இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், "ராமர் கோவில் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம், அது கட்டப்பட வேண்டும் என்று இந்துக்கள் கருதினார்கள். இதை முன்மாதிரியாக கொண்டு பல்வேறு இடங்களில் சர்ச்சைகளை எழுப்பும் இந்து தலைவர்களின் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது. அதன் மூலம் இந்துக்களின் தலைவர்களாக மாறலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல" என்று தெரிவித்தார்.
உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் தோற்றம் குறித்து இந்து அமைப்பினர் சர்ச்சைகள் ஏற்படுத்திய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ்.தலைவரின் பேச்சு முக்கியத்துவம் பெற்றது.
இந்நிலையில் இந்துக்களின் அவலநிலை மோகன் பகவத்திற்கு புரியவில்லை என்று சங்கராச்சாரியார் ஸ்வாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "பல இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதுதான் உண்மை. மோகன் பகவத்திற்கு இந்துக்களின் வலி புரியவில்லை. இந்துக்களின் அவலநிலை அவருக்கு புரியவில்லை என்பது அவரது பேச்சிலிருந்தே தெரிகிறது.
இந்துக்களின் தலைவராவதற்காக சிலர் இந்த பிரச்சனைகளை எழுப்புவதாக மோகன் பகவத் கூறுகிறார். ஆனால் சாதாரண இந்துக்கள் தலைவராக ஆசை படுவதில்லை என்பதை நான் அவருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.