இந்தியா

அசாதுதீன் ஓவைசி - சபாநாயகர் ஓம் பிர்லா

வக்பு வாரிய திருத்த மசோதா விவகாரம்: பாராளுமன்றக்குழுவில் இருந்து விலகுவது குறித்து எதிர்க்கட்சிகள் பரிசீலனை

Published On 2024-11-05 02:35 GMT   |   Update On 2024-11-05 02:35 GMT
  • கூட்டுக்குழு அடிக்கடி கூடி வக்பு வாரிய திருத்த மசோதாவை பரிசீலித்து வருகிறது.
  • குழுவின் செயல்பாடுகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிருப்தியில் உள்ளனர்.

வக்பு வாரிய சொத்துகள் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் நோக்கில் ஏற்கனவே உள்ள வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா ஒன்றை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எனவே இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதற்காக பா.ஜனதா எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டது. அதில் ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த கூட்டுக்குழு அடிக்கடி கூடி வக்பு வாரிய திருத்த மசோதாவை பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளையும் கேட்டு வருகிறது.

அதேநேரம் இந்த குழுவின் செயல்பாடுகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக குழுத்தலைவர் ஜெகதாம்பிகா பால் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அத்துடன் பல்வேறு காரணங்களுக்காக இந்த குழுவின் கூட்டங்களில் இருந்து பலமுறை எதிர்க்கட்சியினர் வெளியேறி உள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை ஜெகதாம்பிகா பால் மறுத்து உள்ளார். மேலும் குழுவின் பா.ஜனதா எம்.பி.க்களும் எதிர்க்கட்சியினரை குறைகூறி வருகின்றனர்.

இந்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கான பாராளுமன்றக்குழுவில் இருந்து முழுமையாக வெளியேறுவது குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பரிசீலித்து வருவதாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளனர்.

அந்த கடிதத்தில் ஜெகதாம்பிகா பால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். குறிப்பாக அவர் தன்னிச்சையாக செயல்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

அந்தவகையில் குழு கூட்டத்துக்கான தேதி, சாட்சிகளை அழைப்பது போன்றவை தொடர்பாக குழு உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்கப்படுவதாகவும், சில நேரங்களில் 3 நாட்கள் தொடர்ந்து கூட்டங்களை நடத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தகுந்த தயாரிப்பு செய்ய கால அவகாசம் கிடைப்பதில்லை என்றும், தயாரிப்பு இல்லாமல் கலந்துரையாடுவது நடைமுறை சாத்தியமில்லை என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பரிசீலிக்கும் பாராளுமன்றக்குழுவும் ஒரு சிறிய பாராளுமன்றம் போலவே செயல்பட வேண்டும் என கூறியுள்ள எம்.பி.க்கள், மாறாக உரிய செயல்முறையை பின்பற்றாமல் அரசு விரும்பியவாறு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வெறும் ஒரு அறையாக கருதக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவரின் இத்தகைய செயல்பாடுகளால் இந்த குழுவில் இருந்து நாங்கள் வெளியேறலாம் என்றும் அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த குழுவில் அங்கம் வகித்து வரும் எதிர்க்கட்சி எம்.பி.க்களான ஆ.ராசா (தி.மு.க.), முகமது ஜாவேத், இம்ரான் மசூத் (காங்கிரஸ்), அசாதுதீன் ஓவைசி (மஜ்லிஸ் கட்சி), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி), கல்யாண் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) உள்ளிட்டோர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

மேலும் இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சந்தித்து பேசவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News