பிரமோற்சவ விழா கோலாகலம்: திருப்பதியில் தேரோட்டம்
- மாட வீதிகளில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
- பிரம்மோற்சவ நிறைவு நாளான நாளை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ 7-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8-வது நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
மாட வீதிகளில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றி வழிபட்டனர். இன்று இரவு அஸ்வ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.
பிரம்மோற்சவ நிறைவு நாளான நாளை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
தீர்த்தவாரி நடைபெறுவதையொட்டி கோவில் அருகே உள்ள புஷ்கரணியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு புதியதாக தண்ணீர் நிரப்பப்பட்டது. மேலும் புஷ்கரணி முழுவதும் தேவஸ்தான ஊழியர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
திருப்பதியில் நேற்று 66,598 பேர் தரிசனம் செய்தனர். 25,103 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதியில் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது.
இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.