என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • சிறுபான்மையினருடன் தெலுங்கு தேசம் கட்சிக்கு வலுவான தொடர்பு உள்ளது.
    • முஸ்லிம்களின் நலனுக்காக பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மாநில அரசு ஏற்பாடு செய்த இப்தார் விருந்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.

    பணக்காரர்கள், ஏழைகளுக்கு உதவுவது குர்ஆன் கற்றுக்கொடுத்த ஒரு நல்ல பண்பு. சிறுபான்மையினருடன் தெலுங்கு தேசம் கட்சிக்கு வலுவான தொடர்பு உள்ளது.

    தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியின் கீழ் ஐக்கிய மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டது.

    சிறுபான்மை நிதிக் குழுவை முதன்முறையாக அமைத்தது என்.டி.ஆர், மாநிலத்தில் உருது மொழியை 2-வது மொழியாக அமல்படுத்தினேன்.

    முஸ்லிம்களின் நலனுக்காக பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வக்பு சொத்துக்களைப் பாதுகாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, தெலுங்கானா ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்தபோது, ஐதராபாத்தில் ஒரு உருது பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. பிரிவினைக்குப் பிறகு, கர்னூலில் ஒரு உருது பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

    தெலுங்கு தேசம் கட்சி முதன்முறையாக இமாம்களுக்கு கவுரவ ஊதியத்தை அமல்படுத்தியது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நீர்த்தேக்கத்தில் பலமுறை படகில் சென்று சோதனை நடத்தினர்.
    • புனித யாத்திரை தளமாக இல்லாமல் போய்விடும் என பக்தர்கள் கடும் எதிர்ப்பு.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் 5 முக்கிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. இதில் பாபவிநாசம் நீர்த்தேக்கம் முக்கியமானது.

    இதில் படகு சவாரி விட வனத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. நீர்த்தேக்கத்தில் பலமுறை படகில் சென்று சோதனை நடத்தினர். விரைவில் படகு சவாரி விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நீர்த்தேக்கம் புனிதமானது என பக்தர்கள் கருதுகின்றனர். ஏழுமலையானை தரிசிப்பதற்கு முன்பாக மலையில் உள்ள பாபவிநாசம் நீர்த்தேக்கத்திற்கு சென்று புனித நீராடி பின்னர் தரிசனத்திற்கு செல்கின்றனர்.

    அதேபோல் சில பக்தர்கள் தண்ணீரை எடுத்து தங்களது தலையில் தெளித்துக் கொள்கின்றனர்.

    இதில் நீராடினால் தங்களது பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

    இந்த புனிதமான நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்ய அனுமதித்தால் அதன் புனிதம் கெட்டு ரிசார்ட்டாக மாறிவிடும். புனித யாத்திரை தளமாக இல்லாமல் போய்விடும் என பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,தினமும் திருப்பதி மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பட கு சவாரி விடுவதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டலாம். பக்தர்கள் படகு சவாரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என கூறினார்.

    சனாதான தர்மத்தை கடைபிடிக்கும் பவன் கல்யாண் வனத்துறை அமைச்சராக இருப்பதால் படகு சவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்க ஒப்புதல்.
    • அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து.

    2025-26 நிதியாண்டில் 5,259 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதன் சேர்மேன் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.

    கோவில் சமையலறை (Temple Kitchen) ஊழியர்கள் சம்பளம் உயர்வு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராயவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    அதுபோக கோடங்கல், கரீம்நகர், உபமகா, அனகபலே, குர்னூல், தர்மவரம், தலகோனா, திருப்பதி (கங்கம்மா கோவில்) ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை புனரமைக்க நிதியுதவி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்கவும், அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து செய்யுள்ளது.

    • 25-ந்தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • திருப்பதி கோவிலில் நேற்று 75 ஆயிரத்து 428 பேர் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 25 மற்றும் 30-ந் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    25-ந்தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. 30-ந்தேதி உகாதி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மற்றும் 29-ந்தேதிகளில் எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.

    தெலுங்கானா மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பரிந்துரை கடிதங்கள் இந்த மாதம் 23-ந்தேதி பெறப்பட்டு 24-ந் தேதி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பதி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 75 ஆயிரத்து 428 பேர் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 920 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • திருப்பதி கோவிலில் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
    • அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்களைக் கட்டுவோம்.

    திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

    திருப்பதி கோவிலில் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

    திருமலை கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது வேலை செய்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள்.

     

    பக்தர்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் இறைவனைக் காணும் வாய்ப்பைப் பெறும் வகையில், அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்களைக் கட்டுவோம்.

    திருமலையின் புனித மலைகளைச் சுற்றி எந்த வணிக நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது. இங்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

     

    • தெலுங்கானாவில் சிவன் கோவில்களுக்கு என்ன பஞ்சமா உள்ளது.
    • தெலுங்கானா அற்புதமான கலாச்சார பாரம்பரியம் கொண்டது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசு கடிதங்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

    இதற்கு தெலுங்கானா மாநில அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் ரவீந்திர பாரதியில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க செல்லும் ஒவ்வொரு முறையும் நமது எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து கடிதங்கள் மூலம் தரிசனம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

    தரிசனத்திற்காக நாம் ஏன் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் பிச்சை எடுக்க வேண்டும். அவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் என்றால். நமக்கு யாதாரி குட்டா தேவஸ்தானம் உள்ளது.

    பத்ராசலத்தில் ராமர் இருக்கிறார். தெலுங்கானாவில் சிவன் கோவில்களுக்கு என்ன பஞ்சமா உள்ளது. தெலுங்கானா அற்புதமான கலாச்சார பாரம்பரியம் கொண்டது.

    நாம் நமது பிராந்தியங்களை அபிவிருத்தி செய்ய தெலுங்கானாவில் உள்ள கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியின் இந்த பரபரப்பான பேச்சு ஏழுமலையானின் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • 4 பேர் ஒரு வீட்டில் வசிக்க, 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
    • பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவின் சதாம் உசேன் என்று அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

    ருஷிகொண்டா மலைகளில் உள்ள ஜெகன் மோகனின் ஆடம்பர மாளிகை குறித்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ், "ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஆந்திராவின் 'சதாம் உசேன்' என்றும், 30 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பேன் என்றும் நினைத்தார்.

    என் தாத்தா முதல்வராக இருந்தார், என் அப்பா முதல்வராக இருந்தார், ஆனால் இவ்வளவு பெரிய அறைகளை நான் பார்த்ததில்லை. அவரது சகோதரி மற்றும் தாயார் ஜெகன் மோகன் குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 4 பேர் ஒரு வீட்டில் வசிக்க, 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை

    அரண்மனை போன்ற இந்த வீட்டை என்ன செய்வது என்பது குறித்து தெலுங்கு தேசம் அரசு முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.

    சதாம் உசேன் ஈராக்கின் அதிபராக இருந்தார், 1979 முதல் 2003 வரை அந்த நாட்டை ஆட்சி செய்தார். அவரது ஆட்சி நிர்வாகம் சர்வாதிகாரமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு ஐதராபாத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • தேர்வு ஏன் நடைபெறவில்லை என்பது குறித்து அவர்களால் அங்குள்ள அதிகாரியிடம் கூட கேட்க முடியவில்லை.

    திருப்பதி:

    ரெயில்வே உதவி லோகோ பைலட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான தேர்வு நேற்று முதல் 2 நாட்கள் நடைபெற இருந்தது.

    இந்த தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து சுமார் 50,000 இளைஞர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 6000 பேருக்கு தமிழகத்திற்கு வெளியே வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.

    சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு ஐதராபாத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ரெயில் மற்றும் பஸ்களில் பலர் மணி நேரம் பயணம் செய்து தேர்வு மையத்திற்கு சென்றனர்.

    ஆனால் திடீரென தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுத சென்ற இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு ஏன் நடைபெறவில்லை என்பது குறித்து அவர்களால் அங்குள்ள அதிகாரியிடம் கூட கேட்க முடியவில்லை.

    அங்கிருந்து அதிகாரிகள் பலரும் தெலுங்கில் பேசினர். இதனால் தமிழக வாலிபர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அலைக்கழிக்கப்பட்டனர். தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் அவர்கள் மீண்டும் வீடு திரும்பினர்.

    இது குறித்து மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறுகையில்:-

    தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6000 பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வருவதற்காக நாங்கள் பஸ்களில் பல மணி நேரம் தூக்கத்தை இழந்து பயணம் செய்து இங்கு வந்தோம்.

    தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடியாமல் ஒரு வழியாக ஆட்டோ மூலம் தேர்வு வந்தடைந்தோம். ஆனால் திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவித்து விட்டனர்.

    தமிழகத்திலேயே இது போன்று ரத்து செய்யப்பட்டிருந்தால் நிம்மதியுடன் வீடு திரும்பி இருப்போம்.

    தற்போது நீண்ட தூரம் பயணம் செய்திருப்பதால் மீண்டும் வீடு திரும்பவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பலர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.அவர்களுக்கு பண விரயமும் ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத சென்ற 6 ஆயிரம் பேரும் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • முழுவதுமாக உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
    • இரண்டு இருக்கைகள் கொண்ட ஒரு விமான டாக்சி வடிவமைக்கப்பட்டு வி2 என்று பெயரிடப்பட்டது.

    அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விமான டாக்சிகளை நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன.

    இந்தப் பந்தயத்தில் சீனா போன்ற நாடுகள் மட்டுமே முன்னிலையில் உள்ள நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் விமான டாக்சிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    குண்டூரைச் சேர்ந்த சாவா அபிராம், அமெரிக்காவில் ரோபாட்டிக்ஸ் பொறியியலில் முதுகலைப் பட்டம் முடித்தார். நம் நாட்டில் ஏதாவது ஒரு அமைப்பை நிறுவும் நோக்கத்துடன் அவர் இங்கு வந்தார்.

    போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் விமான டாக்சிகளை கிடைக்கச் செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி, அவர் அதை கவனமாக ஆய்வு செய்து வருகிறார்.

    விமானி இல்லாமல் தரையில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விமானி இல்லாமல் இந்த வாகனங்களை இயக்க அனுமதிப்பதில்லை என்பதால், இரண்டு மற்றும் மூன்று இருக்கைகளுடன் கூடிய விமான டாக்சிகள் தயாரித்தார்.

    முழுவதுமாக உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு இருக்கைகள் கொண்ட ஒரு விமான டாக்சி வடிவமைக்கப்பட்டு வி2 என்று பெயரிடப்பட்டது.

    சோதனை ஓட்டம் வெற்றியடைந்தது. அவர் 3 இருக்கைகள் ஏர் டாக்சி தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    • சிறுமியை கடத்திச் சென்ற இருவரும் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.
    • பாலியல் வன்கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமியால் பேச முடியவில்லை.

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஜி.கொண்டூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கடந்த 9-ந்தேதி பக்கத்து வீட்டுக்காரருடன் வீரபனேனி குடேமில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.

    கடந்த 13-ந்தேதி உறவினருக்கும், சிறுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சிறுமி கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டில் இருந்து வெளியேறி தனியாக நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    இதனை கவனித்த 15 வயது சிறுவன் மற்றும் ரசாக் என்ற வாலிபர் சிறுமியிடம் வந்து நைசாக பேசினர். பைக்கில் அழைத்து சென்று வீட்டில் பத்திரமாக விடுவதாக தெரிவித்தனர். இதனை நம்பிய சிறுமி அவர்களுடன் பைக்கில் சென்றார்.

    சிறுமியை கடத்திச் சென்ற இருவரும் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அவர்களின் நண்பர்களான அணில் குமார், ஜிதேந்திராவுக்கு போன் செய்து வரவழைத்தனர். அவர்களும் சிறுமியை வன்கொடுமை செய்தனர். அதன் பின்னர் அனித், ஹர்ஷவர்தன், கேசர்ப்பள்ளியை சேர்ந்த சிறுவன் ஆகியோர் சிறுமியை 4 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    4 நாட்களுக்கு பிறகு சிறுமியை என்.டி.ஆர் மாவட்டம் மச்சாவரம் சாலையில் விட்டு தப்பி சென்றனர்.

    அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பாலியல் வன்கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமியால் பேச முடியவில்லை.

    இதையடுத்து போலீசார் சிறுமியை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது சம்பந்தமாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர்.

    • முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆந்திராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
    • ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் 27 பேர் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

    திருப்பதி:

    தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சொத்து விவரம் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்த ஆய்வு நடத்தியது.

    இதில் நாட்டில் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆந்திராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

    முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துக்களுடன் 5-வது இடம் பிடித்துள்ளார்.

    மந்திரி பி.நாராயணா ரூ.824 கோடியுடன் 6-வது இடத்திலும், முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ரூ.757 கோடியுடன் 7-வது இடத்திலும் பிரசாந்தி ரெட்டி எம்.எல்.ஏ என்பவர் ரூ.716 கோடியுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.

    சந்திரபாபு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் ரூ.542 கோடி சொத்துக்களுடனும், நடிகர் பாலகிருஷ்ணா ரூ.482 கோடி மற்றும் மாதவி எம்.எல்.ஏ. ரூ.388 கோடியுடன் முதல் 20 பேர் கொண்ட பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    நாட்டில் உள்ள பணக்கார எம்.எல்.ஏ. க்களில் முதல் 20 பேரில் ஆந்திராவைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தேசிய சொத்து மதிப்பில் 66-வது இடத்தில் உள்ளார்.

    ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் 27 பேர் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

    சொத்து மதிப்பில் மட்டுமல்லாது குற்ற வழக்குகளிலும் ஆந்திராவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அதிகம் பேர் இடம்பெற்றுள்ளனர்.

    ஆந்திராவில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 138 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தேர்தலில் மனுத்தாக்களின் போது தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் 9, தெலுங்கானா 82, பீகார் 158 ,மகாராஷ்டிரா 127, தமிழ்நாட்டில் 132 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

    • பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார்.
    • ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கும்மரகுண்டாவை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 50). இவரது மனைவி சாரதா.

    சுப்பிரமணியத்திற்கு 20 வயதாக இருந்தபோது முதல் முறையாக பாம்பு கடித்தது. அதன் பிறகு கூலி வேலைக்கு செல்லும் போதெல்லாம் வருடத்திற்கு 4 முதல் 5 தடவை பாம்புகள் கடித்தன.

    ஒவ்வொரு முறையும் பாம்பு கடிக்கும் போதும் உயிர் பிழைப்போமா என்று கவலையடைந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

    பாம்பு கடிக்கு பயந்து சுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு கட்டிட வேலை செய்தார். பெங்களூரில் கட்டிட வேலை செய்யும் போதும் சுப்பிரமணியத்தை பாம்புகள் கடித்தன.

    இதனால் விரத்தி அடைந்த சுப்பிரமணியம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.

    பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார். இதனால் ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.

    சொந்த ஊருக்கு திரும்பிய சுப்பிரமணியம் அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன் தினம் கோழி பண்ணையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது மீண்டும் ஒரு பாம்பு வந்து சுப்பிரமணியத்தை கடித்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு சுப்பிரமணியம் தற்போது குணம் அடைந்து வருகிறார்.

    இதுகுறித்து அவரது மனைவி சாரதா கூறுகையில்:-

    எனது கணவரை டஜன் கணக்கில் பாம்புகள் கடித்துள்ளன. ஒவ்வொரு தடவை பாம்பு கடிக்கும் போதும் வெளியில் கடன் வாங்கி சிகிச்சை பெறுவதும் மீண்டும் கூலி வேலை செய்து கடனை அடைப்பதே எங்கள் வாழ்க்கையில் சுமையாக மாறிவிட்டது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இனியாவது பாம்பு கடியில் இருந்து தப்பிக்க முடியுமா? என்ற கலக்கத்தில் சுப்பிரமணியின் குடும்பத்தினர் உள்ளனர்.

    ×