என் மலர்tooltip icon

    இந்தியா

    ரெயில்வே தேர்வு திடீர் ரத்து- வெளிமாநிலங்களில் 6 ஆயிரம் தமிழக இளைஞர்கள் அலைக்கழிப்பு
    X

    ரெயில்வே தேர்வு திடீர் ரத்து- வெளிமாநிலங்களில் 6 ஆயிரம் தமிழக இளைஞர்கள் அலைக்கழிப்பு

    • பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு ஐதராபாத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • தேர்வு ஏன் நடைபெறவில்லை என்பது குறித்து அவர்களால் அங்குள்ள அதிகாரியிடம் கூட கேட்க முடியவில்லை.

    திருப்பதி:

    ரெயில்வே உதவி லோகோ பைலட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான தேர்வு நேற்று முதல் 2 நாட்கள் நடைபெற இருந்தது.

    இந்த தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து சுமார் 50,000 இளைஞர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 6000 பேருக்கு தமிழகத்திற்கு வெளியே வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.

    சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு ஐதராபாத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ரெயில் மற்றும் பஸ்களில் பலர் மணி நேரம் பயணம் செய்து தேர்வு மையத்திற்கு சென்றனர்.

    ஆனால் திடீரென தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுத சென்ற இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு ஏன் நடைபெறவில்லை என்பது குறித்து அவர்களால் அங்குள்ள அதிகாரியிடம் கூட கேட்க முடியவில்லை.

    அங்கிருந்து அதிகாரிகள் பலரும் தெலுங்கில் பேசினர். இதனால் தமிழக வாலிபர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அலைக்கழிக்கப்பட்டனர். தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் அவர்கள் மீண்டும் வீடு திரும்பினர்.

    இது குறித்து மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறுகையில்:-

    தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6000 பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வருவதற்காக நாங்கள் பஸ்களில் பல மணி நேரம் தூக்கத்தை இழந்து பயணம் செய்து இங்கு வந்தோம்.

    தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடியாமல் ஒரு வழியாக ஆட்டோ மூலம் தேர்வு வந்தடைந்தோம். ஆனால் திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவித்து விட்டனர்.

    தமிழகத்திலேயே இது போன்று ரத்து செய்யப்பட்டிருந்தால் நிம்மதியுடன் வீடு திரும்பி இருப்போம்.

    தற்போது நீண்ட தூரம் பயணம் செய்திருப்பதால் மீண்டும் வீடு திரும்பவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பலர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.அவர்களுக்கு பண விரயமும் ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத சென்ற 6 ஆயிரம் பேரும் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×