மணிப்பூரில் கலவரம் நீடிப்பு: பாஜக பெண் மந்திரி வீட்டுக்கு தீ வைப்பு- 4 ஆயிரம் பேர் மீது வழக்கு
- ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
- சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு 6 வழக்குகளை பதிவு செய்து கலவரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இம்பால்:
பா.ஜனதா ஆட்சி நடை பெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதம் 3-ந் தேதி பெரும் கலவரம் ஏற்பட்டது.
மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவே இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாகும்.
மணிப்பூர் முழுவதும் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு அங்கு மீண்டும் கலவரம் ஏற்பட்டது. ஒரு கிராமத்தின் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர்.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் சாம்பெல் பகுதியில் அமைந்துள்ள குகி சமூக பெண் மந்திரியான நேம்சா கிப்ஜெனின் வீட்டுக்கு மர்ம கும்பல் நேற்று இரவு தீ வைத்தனர்.
இந்த சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லை. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மணிப்பூர் மந்திரிகளில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் மந்திரி இவர் ஆவார்.
பெண் மந்திரியின் வீட்டுக்கு தீ வைத்த கும்பலை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 110-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 310 பேர் காயம் அடைந்தனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
வன்முறை சம்பவம் தொடர்பாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு 6 வழக்குகளை பதிவு செய்து கலவரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.