நடிகர் மோகன்லால் மீதான வழக்கை 6 மாதத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- கேரள ஐகோர்ட்டு உத்தரவு
- கடந்த 2016-ம் ஆண்டு கேரள அரசு மோகன்லால் யானை தந்தம் வைத்திருக்க அனுமதி வழங்கியது.
- பெரும்பாவூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கேரள அரசு சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால்.
நடிகர் மோகன்லாலுக்கு சென்னை, கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மோகன்லால் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கொச்சியில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் 2 ஜோடி யானை தந்தங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மோகன்லாலிடம் யானை தந்தம் வைத்திருக்க உரிய லைசன்ஸ் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கொச்சி பெரும்பாவூர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கேரள அரசு மோகன்லால் யானை தந்தம் வைத்திருக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து பெரும்பாவூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கேரள அரசு சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை எதிர்த்து வனவிலங்கு ஆர்வலர்கள் 2 பேர் பெரும்பாவூர் கோர்ட்டில் மனு செய்தனர். அதில் மோகன்லால் மீதான வழக்கை வாபஸ்பெற கூடாது என்று கூறியிருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, மோகன்லால் மீதான வழக்கை வாபஸ் பெற மறுத்து அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் கேரள அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பெரும்பாவூர் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
மேலும் மோகன்லால் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரிய மனுவை விசாரித்து 6 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாவூர் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.