ஆபரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் நடத்திய டாக்டர் பணி நீக்கம்
- வருங்கால மனைவியுடன் திருமணத்துக்கு முந்தைய 'போட்டோசூட்டை' வித்தியாசமாக எடுக்க திட்டமிட்டார்.
- சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றியவர் அபிஷேக். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஒப்பந்த அடிப்படையில் இந்த ஆஸ்பத்திரியில் பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில் அவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அபிஷேக் தனது வருங்கால மனைவியுடன் திருமணத்துக்கு முந்தைய 'போட்டோஷூட்டை' வித்தியாசமாக எடுக்க திட்டமிட்டார்.
அதன்படி தான் பணியாற்றும் பரமசாகர் அரசு ஆஸ்பத்திரியில் போட்டோஷூட் நடத்த முடிவு செய்தார். அப்போது அறுவை சிகிச்சை பிரிவில் வைத்து நோயாளிக்கு அபிஷேக் அறுவை சிகிச்சை செய்வது போலவும், அவருக்கு மணப்பெண் உதவுவது போலவும், அறுவை சிகிச்சை முடிந்ததும் நோயாளி எழுந்து அமர்வது போலவும் போட்டோஷூட் நடத்தி உள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
இந்த போட்டோஷூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதும் அதனை பார்த்து அனைத்து தரப்பினரும் டாக்டர் அபிஷேக்கை கடுமையாக கண்டித்தனர்.
கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் டாக்டர் ஒருவர், போட்டோஷூட் நடத்தி மருத்துவ பணிக்கு இழிவு ஏற்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் ஆபரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் நடத்திய டாக்டர் அபிஷேக்கை பணி நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ரேணுகா பிரசாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி பரமசாகர் அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு நோட்டீசும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.