சிறப்புக் கட்டுரைகள்

வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது: மீனா மலரும் நினைவுகள்

Published On 2025-04-07 13:31 IST   |   Update On 2025-04-07 13:31:00 IST
  • சைதாப்பேட்டையில் புது வீடு கட்ட முடிவு செய்த போது நிறைய மாடல்கள் காட்டினார்கள்.
  • என்னதான் நடக்கிறது என்று எங்களுக்கு எதுவும் புரியவில்லை.

நான் சின்னவளாக இருந்தபோது வீட்டில் நிறைய பூச்செடிகள் இருந்தது. அதில் பூத்து கிடக்கும் பூக்களை பறிக்கும் அளவுக்கு அப்போது நான் வளர்ந்திருக்கவில்லை.

ஆனால் தலையில் பூ வைப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். பூ கட்டவும் எனக்கு தெரியும். வீட்டில் இருந்து ஸ்டூலை எடுத்து வந்து அதில் ஏறி நின்று பூக்களை பறித்து கட்டி தலையில் வைத்து கொண்டு பள்ளிக்கூடம் செல்வேன். அப்போது நாங்கள் கோடம்பாக்கத்தில் சிறிய வீட்டில் தான் இருந்தோம்.

தி.நகரில் உள்ள பள்ளியில் தொடக்க கல்வி படித்தேன். வளர்ந்த பிறகும் அந்த தோட்டத்து ஆசையும் என்னை தொடர்ந்தே வந்தது. அழகான வீடு கட்டணும், வீட்டை சுற்றி தோட்டம் இருக்கணும் என்பது என் ஆசையாக இருந்தது.

சைதாப்பேட்டையில் புது வீடு கட்ட முடிவு செய்த போது நிறைய மாடல்கள் காட்டினார்கள். அதில் தற்போது நாங்கள் குடியிருக்கும் கேரள மாடல் பிடித்திருந்தது. எனவே அந்த மாடலில் வீட்டை தேர்வு செய்து கட்டினோம்.

எங்கள் வீட்டில் 2 தெரு நாய்களை ஆசை ஆசையாக வளர்த்தேன். அதில் ஒரு நாய்க்கு 'பிராந்தி என்று பெயர். பெயரை கேட்டால் காமெடியாகத்தான் தெரியும். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. என் அப்பாவுக்கு பிடித்த மதுபானம் பிராந்தி. அதனால் அந்த நாய்க்கும் பிராந்தி என்று பெயர் வைத்து விட்டார். அதை பார்த்ததும் நானும் விளையாட்டாக மற்றொரு நாய்க்கு 'விஸ்கி' என்று பெயர் வைத்தேன். ஆனால் அது ஆண் நாய். கம்பீரமாக இருக்கும் எனவே டைகர் என்றே அழைப்பேன்.



விஜய்யின் 'தெறி' படத்தில் என் மகள் நைனிகா நடிக்க தொடங்கிய கால கட்டம் அது. கோவாவில் ஷூட்டிங் ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கும் நைனிகாவுக்கும் பட தயாரிப்பு நிறுவனம் விமான டிக்கெட் போட்டு இருந்தது. படப்பிடிப்புக்கு புறப்படும் நாளில் வீட்டில் சமையல்காரர்களும் இல்லை. அம்மா மட்டும் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே அவரையும் நானே டிக்கெட் போட்டு என்னோடு கோவாவுக்கு அழைத்து சென்றேன்.

நைனிகா சினிமாவில் அறிமுகமான படம் அது. அதிலும் அவள் மிகவும் சின்ன பொண்ணு. எனவே எப்படி நடிக்கப் போகிறாளோ என்று எனக்குத்தான் ஒரே பதட்டமாக இருந்தது. படப்பிடிப்பின் போது அருகில் இருந்தே கவனித்து வந்தேன். அவளுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது ரொம்ப சின்ன டயலாக்கு தான். அதை முன்கூட்டியே அறையில் வைத்து பேச கற்றுக்கொடுத்தேன். ஆனாலும் படப்பிடிப்பின் போது சிறுபிள்ளைதனமாகத்தான் இருந்தாள்.

ஒரு பெரிய நட்சத்திர நடிகர் விஜய். அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் குழந்தை தானே என்று நினைத்து எல்லாவற்றையும் சமாளித்து அவளோடு நடித்தது எனக்கு பிரமிப்பை கொடுத்தது. கோவாவில் நாங்கள் படப்பிடிப்பில் இருந்தபோது சென்னையில் பெருமழை பெய்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருக்கிறது... என்று தினம் ஒரு செய்தி வந்து கொண்டிருந்தது.

எங்கள் வீட்டிற்கு எதிர்புறத்தில் இருக்கும் அபார்ட்மென்டில் நைனிகாவின் வகுப்பு தோழியின் வீடு இருக்கிறது. அவர்களிடம் போன் செய்து தான் நிலவரங்களை கேட்டு கொண்டிருந்தேன்.

அதன் பிறகு மின்சாரமும் தடைபட்டதால் செல்போன் சுவிட்ச் ஆகியிருக்கிறது. எனவே அவர்களிடம் பேச முடியவில்லை. அப்போது வீட்டு வேலைக்காரர்கள் என்னை தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டுக்குள் வெள்ளம் வந்து விட்டதாகவும் எங்கள் வீட்டில் தங்கி கொள்ளலாமா என்று அனுமதி கேட்டார்கள்.

பரவாயில்லை போய் தங்கி கொள்ளுங்கள் என்றேன். ஆனால் அன்று இரவில் மீண்டும் போன் செய்து 'அம்மா உங்கள் வீட்டுக்குள்ளும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது' என்றார்கள்.

ரன்னிங் கமென்ட்ரி போல் மீண்டும் போன் செய்து 'அம்மா போர்டிக்கோவில் இருக்கும் உங்கள் கார்களும் மூழ்கி விடும் போல் இருக்கிறது. நாய்கள் இரண்டும் தண்ணீரில் மூழ்கி செத்து விடக் கூடாது என்று அவிழ்த்து விட்டு விட்டேன். நாங்களும் இங்கு தங்க முடியாது. வேறு எங்காவது செல்லப்போகிறோம் என்று கூறினார்கள்.

என்னதான் நடக்கிறது என்று எங்களுக்கு எதுவும் புரியவில்லை. பக்கத்து தெருவில் குடியிருக்கும் லெட்சுமி ஆன்டிக்கு போன் செய்து 'ஆன்டி, வெள்ளம் புகுந்து விட்டதாக கூறுகிறார்கள். அங்கு என்ன தான் நடக்கிறது? என்றேன். அவர் உடனே நீ எங்கே இருக்கிறாய்? என்றார் என்னிடம்.

நான் கோவாவில் இருக்கிறேன் என்றதும் தப்பித்தீர்கள். அங்கேயே பத்திரமாக இருங்கள். நான் இப்போது தான் படகு மூலம் வெளியேறி கொண்டிருக்கிறேன் என்றார்.



அச்சச்சோ.... நிலமை ரொம்ப மோசமாக இருக்கும் போலிருக்கே என்று ஒரே பதட்டமாக இருந்தது. உடனே அம்மா சென்னைக்கு கிளம்பினார்.

ஆனால் சென்னைக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்ததால் கோவாவில் இருந்து பெங்களுருவுக்கு சென்று அங்கிருந்து காரில் சென்னை சென்றார். சென்னைக்கு சென்றாலும் சைதாப்பேட்டை பகுதி தனி தீவுபோல் ஆகிவிட்டதால் வீட்டுக்கு செல்ல முடியாமல் தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி இருந்தார். செம்பரம்பாக்கம் அணை தண்ணீர் அதிக அளவு திறந்து விடப்பட்டதால் தான் அவ்வளவு வெள்ளம் சென்னையில் குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்ததாக கூறினார்கள். இந்த அளவு வீட்டுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்ததை வாழ்நாளில் இதுவரை சந்தித்தது இல்லை.

இரண்டு நாள் கழித்து வெள்ளம் வடிந்த பிறகு அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் அவர் பார்த்த காட்சி அவரை அதிர வைத்து விட்டது.

அப்படி என்ன காட்சி?

அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்)

Tags:    

Similar News