ஆஸ்திரேலியா விலகல் எதிரொலி- 2026 காமன்வெல்த் விளையாட்டை நடத்த குஜராத் அரசு ஆர்வம்
- காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்துவதில் இருந்து ஆஸ்திரேலியா பின் வாங்கியது.
- 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியை குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடத்த குஜராத் அரசு ஆர்வமாக இருக்கிறது.
காந்திநகர்:
காமன்வெல்த் விளையாட்டு போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
கடைசியாக 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்தது.
23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2026-ம் ஆண்டு மார்ச் 17 முதல் 29-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள 5 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் காமன் வெல்த் விளையாட்டு போட்டியை நடத்துவதில் இருந்து ஆஸ்திரேலியா பின் வாங்கியது. போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விக்டோரியா மாகாணம் திடீரென விலகியது. போட்டியை நடத்த திட்டமிட்ட தொகையை விட அதிகமாக செலவாகும் என்பதால் இந்த முடிவை எடுத்தது.
இதனால் காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் கடும் அதிர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில் 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியை குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடத்த குஜராத் அரசு ஆர்வமாக இருக்கிறது. அகமதாபாத் நகரில் போட்டியை நடத்துவதற்காக ஏலத்தில் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இதற்கான ஏற்பாடுகளை குஜராத் அரசு செய்யும்.
2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உள்கட்டமைப்புகள் அகமதாபாத்தில் செயல்பட்டு வருகின்றன.
இதனால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தி விடலாம் என்பதில் அம்மாநில அரசு தீவிரமாக உள்ளது.