அனைத்து உறவுகள் இருந்தும் பலனில்லை... 90 வயது மனைவியுடன் தனியாக வாழும் 105 வயது பூசாரி
- எம்.ஜி.ஆரை நீண்ட நேரம் காத்திருந்து அவர் அருகில் நின்று பார்த்த நினைவுகள் இன்று வரை பசுமையாக உள்ளது.
- பெற்றெடுத்த பிள்ளைகள் கூட உதவாத நிலையில், தங்களது உழைப்பை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
நமது வாழ்க்கை முறையில் நமது ஆயுட்காலத்தை கணக்கிட்டு பார்த்தால் நமது முன்னோர்கள் அனைவரும் குறைந்தது 95 முதல் 102 வயது முடிந்தே இறந்தனர். நமது தாத்தா பாட்டியின் ஆயுட்காலம் 70 முதல் 90 வயது வரை இருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் 50 வயதை கடந்தாலே சாதனை என பார்க்கப்படுகிறது. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 70.19 ஆக உள்ளது. தமிழக மக்களின் சராசரி ஆயுட்காலம் 71.4 ஆண்டுகள். இதில். ஆண்களுக்கு 68.5 வயதும், பெண்களுக்கு 74.8 வயது என ஆய்வறிக்கை கூறுகிறது.
ஆனால் திண்டுக்கல் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 105 வயது முதியவர் வாலிபரைப்போல் அங்கும் இங்கும் துணை ஏதும் இல்லாமல் நடைபோட்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, ரெட்டியார் சத்திரம் யூனியன் கன்னிவாடி அருகே உள்ள பாப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (105). கோவில் பூசாரியான இவரது மனைவி மாரியம்மாள் (90). கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஆனந்த ராஜ் என்ற மகனும், ராமாயி, மல்லாயி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வெளியூரில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் ஆகியோரும் உள்ளனர்.
ஊரில் சிறிய தகர செட் அமைத்து முத்து மாரியம்மன் சிலை வைத்து முத்து பூஜை செய்து வருகிறார். அங்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி ஆசி வழங்குகிறார். இவரது வாக்கு பலிப்பதாக பக்தர்கள் தேடி வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் காணிக்கையே இவருக்கு சிறிய வருமானமாக உள்ளது. இவருக்கு மகன், மகள்கள் மற்றும் பேரன், கொள்ளு பேரன்கள் இருந்த போதிலும் யாருடைய உதவியும் இன்றி வயதான தம்பதியர் தளராது உழைத்து வாழ்ந்து வருகின்றனர்.
தள்ளாத வயதிலும், தளராமல் உறவுகள் துணையின்றி வசித்து வரும் முத்து பூசாரி கூறுகையில், நான் கடந்த 1920ல் பிறந்தேன். 19-வது வயதில் திருமணம் முடிந்தது. விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வந்தேன். 40 வருடங்களுக்கு மேல் தனியாக மனைவியுடன் வசித்து வருகிறேன். உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்றெடுத்த பிள்ளைகள் வரை உதவி கரம் கேட்காமல் நாங்கள் இருவரும் வசித்து வருகிறோம் என்றார்.
திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கசவனம்பட்டி மவுனகுரு நிர்வாண சுவாமிகளை நான் சிறு வயதாக இருக்கும்போதே பார்த்துள்ளேன். ஆடையின்றி நிர்வாணமாக யாரிடமும் பேசாமல் மவுனமாக சுற்றுவார். அவரிடம் நான் ஆசி பெற்றுள்ளேன். அதேபோல் காந்தி கிராமத்திற்கு வந்த மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, நேரு, சுந்தராம்பாள் ஆகியோரை அருகில் இருந்து பார்த்துள்ளேன்.
திண்டுக்கல்லுக்கு முதல் முறையாக 1971ம் ஆண்டு வந்த எம்.ஜி.ஆரை நீண்ட நேரம் காத்திருந்து அவர் அருகில் நின்று பார்த்த நினைவுகள் இன்று வரை பசுமையாக உள்ளது.
ஜவஹர்லால் நேரு, குல்ஜாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்ம ராவ், அடல் பிகாரி வாஜ்பாய், தேவே கவுடா, இந்தர் குமார் குஜ்ரால், மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகிய 15 பிரதமர்களை பார்த்துள்ளேன்.
அதேபோல் தமிழகத்தில் பி.டி. ராஜன், பொப்பிலி ராஜா, கர்மா வெங்கட ரெட்டி நாயுடு, ராஜ கோபாலச்சாரி, தெங்குட்டுரி பிரகாசம், ஓ.பி. ராமசாமி, பி.எஸ். குமாரசாமி, காமராஜ், எஸ். பக்தவத்சலம், வி.ஆர்.நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜானகி, ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் என 21 முதலமைச்சர்களையும் பார்த்துள்ளேன் என்றார்.
தள்ளாத வயதில் தளராது நடந்து வருகிறார் முத்து பூசாரி. இதுவரை அரசிடம் இருந்து எந்த சலுகையும் எதிர்பார்க்காமல் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். முதியோர் உதவித்தொகை கூட இதுவரை அவர்கள் பெறவில்லை. மேலும் தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை கூட ஒரு மாதம் மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன் பிறகு அதுவும் வரவில்லை. பெற்றெடுத்த பிள்ளைகள் கூட உதவாத நிலையில், தங்களது உழைப்பை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
அரசின் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலம் விழுதுகள் போல் சொந்தம் 1000 இருந்தென்ன, வேரென நீயிருந்தால் நான் வீழ்ந்து விடாமல் இருப்பேன் என்ற வரிகளுக்கு ஏற்ப மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தள்ளாத வயதில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருவதை தற்கால தம்பதிகள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.