search icon
என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பள்ளி திறக்கப்பட்டு 1 வருடம் ஆகியும் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
    • உடனடியாக ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது பரளிபுதூர் ஊராட்சி. இங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் படிப்பதற்காக 1 கி.மீ. தூரத்தில் பரளிபுதூரில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று வந்தனர்.

    இதனால் தங்கள் பகுதிக்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க தொடக்கப் பள்ளி அமைக்க கோரி கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் 2023-ம் ஆண்டு டிசம்பரில் பரளிபுதூரில் ரூ.39 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கொண்ட பள்ளி கட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது.

    ஆனால் பள்ளி திறக்கப்பட்டு 1 வருடம் ஆகியும் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் இன்று காலை பள்ளி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததை கண்டித்தும், உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் மாணவ-மாணவிகளை வகுப்பறைக்குள் அமரவைத்து கிராமத்து இளைஞர்களே பாடம் நடத்தினர். போராட்டம் நடப்பது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,

    1 வருடமாக குழந்தைகள் எந்தவித படிப்பறிவும் இல்லாமல் வெறுமனே பள்ளிக்குச் சென்று வீடு திரும்பி வருகின்றனர். இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகப் பெருமானின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

    சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆன்மீக பயணமாக பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கும் செல்கின்றனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், அடிவாரம், கிரிவீதி, படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர்.

    மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அன்னதான கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் வரிசையில் காத்திருந்து முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர்.

    ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த போதிய அளவு இடம் இல்லாததால் சாலையில் நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தடுக்கும் விதமாக கொடைக்கானல் செல்லும் சாலையில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. 

    • 2 தந்தங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார், தலைமையில் வனவர்கள் ரமேஷ், முத்துகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, பெரும்பாறை, சித்தரேவு, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது வத்தலக்குண்டு வனச்சரக எல்லைக்குட்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே 3 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது36), கொடைக்கானல் பள்ளங்கியை சேர்ந்தவர் ஜெயராமன் (74), வீரக்கல் கும்மம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை (49) என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் விற்பனைக்காக 2 யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்த 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • மண், பாறைகளும் சாலையில் சரிந்துள்ளது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காணரமாக திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

    சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு செல்ல பழனி, வத்தலக்குண்டுவில் இருந்து மலைச்சாலை உள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து பெரியகுளம், அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் பாதையை சீரமைத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மலைச்சாலையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டதால் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இலகுரக வாகனங்கள், பைக்குகள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

    தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடுக்கம் சாலையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மண், பாறைகளும் சாலையில் சரிந்துள்ளது.

    இதனை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். தற்காலிக சீரமைப்பிற்கு பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

    இருப்பினும் தடுப்பு சுவர்களை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    திண்டுக்கல் 2, காமாட்சிபுரம் 3.8, நிலக்கோ ட்டை 2.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 2.2, புகையிலை ஆராய்ச்சி மையம் 2.2, பழனி 3, ரோஸ்கார்டன் 2.5, பிரையண்ட் பூங்கா 1.5 என மாவட்டம் முழுவதும் 19.40 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • தொழில் அதிபர் ரத்தினம் தமிழகம் முழுவதும் மணல் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
    • ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லை சேர்ந்த தொழில் அதிபர் ரத்தினம். இவருக்கு திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இது தவிர தமிழகம் முழுவதும் மணல் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அதிக அளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பலர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டனர். அப்போது ஆடிட்டர் பிரேம்குமார், திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்தினம், புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் இவ்வழக்கில் இருந்து வெளியே வந்தனர். ஏற்கனவே தொழில் அதிபர் ரத்தினம் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு நெருக்கமாக உள்ள இடங்களில் 2 முறை அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள ரத்தினத்தின் அலுவலகத்திற்கு 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்த நபர்களிடம் ரத்தினம் எங்கே உள்ளார் என விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து அலுவலகத்தின் கதவை பூட்டிக்கொண்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரத்தினத்தின் மகன் வெங்கடேஷ் திண்டுக்கல் மாநகராட்சியில் 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமலாக்கத்துறை சோதனை குறித்து அறிந்ததும் அவரது ஆதரவா ளர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. 

    • பாதிக்கப்பட்ட 12 பேரும் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
    • போலீசார் அவரை காவலில் எடுத்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆத்திக்கண்ணன் (வயது32). இவர் உள்பட அதே பகுதியை சேர்ந்த 12 பேர் கடந்த ஆண்டு அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்பு குழு மாவட்ட பொருளாளரான மாதவத்துரை (39) மற்றும் கோவையை சேர்ந்த மாநில அமைப்பு செயலாளர் கலில்ரகுமான் ஆகியோரை அனுகினர். அவர்கள் பழனி கோவிலில் வேலை வாங்கி தருவதாகவும், வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் வேலை வாங்கி தருவதாகவும் ரூ.34 லட்சம் பெற்றனர்.

    ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டனர். ஆனால் அவர்கள் பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட 12 பேரும் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

    மாதவத்துரை தலைமறைவான நிலையில் கலில்ரகுமான் இதேபோன்று பல்வேறு நபரிடம் மோசடி செய்து கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் இருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை காவலில் எடுத்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காப்பி வழங்க ஏற்பாடு.
    • குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டு வருகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    தற்போது சபரிமலை சீசனாக இருப்பதால் வழக்கத்தை விட ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    தினமும் அதிகாலை 4.30 மணி முதல் படிப்பாதை, யானைப்பாதை வழியாக பக்தர்கள் மலைக்கோ விலுக்கு சென்றவண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க பழனி தேவஸ்தானம் சார்பில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மோர் கொடுக்கப்பட்டு வந்தது.

    தற்போது மழை மற்றும் கடும் குளிர் நிலவுவதால் மோருக்கு பதிலாக சுடச்சுட சுக்கு காப்பி இலவசமாக வழங்கப்படுகிறது. மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் இடும்பன் கோவில் அருகே தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காப்பி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக அதே இடத்தில் அடுப்பு வைத்து வெல்லம், மல்லி, சுக்கு உள்ளிட்டவை சேர்த்து தயார் செய்து தொடர்ந்து வழங்கப்படுகிறது. தினந்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கும், தேவைக்கேற்ப கூடுதலாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதேபோல் மலைக்கோவிலில் தினமும் காலை முதல் இரவு வரை 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • இடைவிடாமல் சாரல் மழை பெய்து வருகிறது.
    • ஆங்காங்கே மண்சரிவு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    திண்டுக்கல்:

    குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையிலும் நேற்று மாலை முதலே இடைவிடாமல் சாரல் மழை பெய்து வருகிறது.

    திண்டுக்கல் மட்டுமின்றி கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    நேற்று மாலையில் தொடங்கிய மழை இன்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவர்கள் நனைந்தபடியே சென்றனர்.

    அதேபோல் இன்று காலையிலும் குடைபிடித்தபடியும், மழை கோட் அணிந்தபடியும் சிரமத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இதேபோல் அன்றாட பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் அனைத்து சுற்றுலா தலங்களும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


    கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் நீடித்து வந்த நிலையில் தற்போது பனி மற்றும் மழையும் சேர்ந்து மக்களை வாட்டி எடுத்து வருகிறது.

    சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் மலைச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    இதனால் ஆங்காங்கே மண்சரிவு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணத்தால் பெரும்பாறை அருகே உள்ள மூலக்கடை-புல்லாவெளி இடையே இஞ்சோடை என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் அதிகாலை சுமார் 4 மணி அளவில் சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் மின் கம்பத்தை அகற்றினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது. ஆனால் மீண்டும் மின்சாரம் வராததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    திண்டுக்கல் 7.40, காமாட்சிபுரம் 13.80, நத்தம் 6, நிலக்கோட்டை 6.20, சத்திரப்பட்டி 12.40, வேடசந்தூர் 11.20, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 11, பழனி 6, கொடைக்கானல் ரோஸ் கார்டன் 28.50, பிரையண்ட் பூங்கா 28 என மாவட்டத்தில் இன்று காலை வரை 130.50 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • நெய் வினியோகம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு சிறப்பு குழு அமைத்தது.
    • பால் பொருட்கள் அனைத்திலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    திண்டுக்கல்:

    திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருமலையில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுவதுடன் கூடுதலாக பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் சேர்க்கப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாகவும், அதில் விலங்குகள், மீன்களின் கொழுப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    லட்டு பிரசாதத்திற்கான நெய் திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் பால் நிறுவனமான ஏ.ஆர்.டெய்ரி சார்பில் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெய் வினியோகம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு சிறப்பு குழு அமைத்தது. திருப்பதி தேவஸ்தானத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை திண்டுக்கல் தனியார் பால் நிறுவனம் மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதனிடையே நெய் தொடர்பாக உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில் அதனை பொதுவெளியில் கூறியதற்காக ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் மக்களின் மத நம்பிக்கை சார்ந்த இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குனரின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.

    மத்திய உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தில் 14 மணிநேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். மேலும் நெய் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் உணவு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். பால் பொருட்கள் அனைத்திலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. 3 கார்களில் 11 பேர் வந்து தொடங்கிய சோதனை இரவுவரை நீடித்தது. மேலும் நெய்களின் பகுப்பாய்வு மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.

    அதன் பின்னர் இதுகுறித்து இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    • பல்வேறு கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கின்றனர்.
    • மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் என வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் தொடங்கிய நிலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.

    தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வரும் பக்தர்கள் சபரிமலைக்கு வர தொடங்கியதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் பழனி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்பட பல்வேறு கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கின்றனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பழனியில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம், யானைப்பாதை, படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இனிவரும் காலங்களிலும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    • மலை முகடுகளை பனி மூட்டங்கள் சூழ்ந்துள்ளது.
    • நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    கடந்த அக்டோபர் மாதம் ஆப் சீசன் தொடங்கிய நிலையில் வடமாநிலங்களில் இருந்து தேனிலவு கொண்டாட ஏராளமான இளம்ஜோடிகள் வந்தனர்.

    தற்போது பனி காலத்தின் தொடக்கமாக பல்வேறு பகுதிகளில் மலை முகடுகளை பனி மூட்டங்கள் சூழ்ந்துள்ளது.

    அதிகாலை நேரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இந்த காட்சிகளை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர்.

    நகரில் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    மேலும் கோக்கர்ஸ்வாக், தூண்பாறை, குணாகுகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, ரோஜாபூங்கா, செட்டியார் பூங்கா, பிரைண்ட் பூங்காவிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி பகுதிகளுக்கும் படையெடுத்தனர். அங்கு எலும்பள்ளம் ஏரி, முயல் ஆராய்ச்சி பண்ணை ஆகியவற்றையும் கண்டு ரசித்தனர்.

    அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட பட உள்ள நிலையில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தனியார் விடுதிகளில் பல்வேறு வண்ண அலங்காரங்கள் செய்யும் பணி தொடங்கி உள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல்வேறு வகையான கேக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

    • தி.மு.க.வில் கூட்டணி தொகுதி பங்கீடு உண்டு.
    • மக்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    பொதுமக்களால் கொடுக்கப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கப்படும். விடுபட்ட மகளிர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலே முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அனைத்து கிராமத்திற்கும் சாலை வசதி, பஸ் வசதி, குடிதண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றார்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

    தி.மு.க.வில் கூட்டணி தொகுதி பங்கீடு உண்டு. ஆனால் ஆட்சியில் பங்கீடு கிடையாது. தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் வீடுகள் சிறப்பாக கட்டப்பட்டு வருகிறது. மக்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு பத்மாவதி ராஜகணேஷ், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, அருள் கலாவதி, ஆத்தூர் தாசில்தார் முத்துமுருகன், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் காணிக்கைசாமி, பாப்பாத்தி, செல்வி காங்கேயன், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×