என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயிலில் ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.13.77 லட்சம் பறிமுதல்: வியாபாரி கைது

- திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- முறைகேடு செய்து ஈட்டியதா என்று விசாரணை.
திண்டுக்கல்:
டெல்லியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் நேற்று திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி ரெயில்வே எஸ்.பி. ராஜன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தனிப்பிரிவு காவலர் மணிவண்ணன் கொண்ட போலீசார் அந்த ரெயிலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (வயது 48) என்பவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அதில் ரூ.13 லட்சத்து 77 ஆயிரத்தி 900 பணம் இருந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது தான் வெளிநாட்டு பணத்தை மாற்றி தரும் பணியில் இருப்பதாகவும், அதற்காக கமிசன் பெற்று வருவதாகவும் கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு நபருக்கு வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொடுத்ததில் கிடைத்த பணத்தை தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதற்குரிய எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை.
இதனையடுத்து அந்த பணத்தை திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் நவநீத கிருஷ்ணனை கைது செய்து இந்த பணம் உண்மையிலேயே வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொடுத்ததில் கிடைத்ததா? அல்லது முறைகேடு செய்து ஈட்டியதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.