என் மலர்
தமிழ்நாடு

2026 சட்டமன்ற தேர்தலில் எந்த போட்டியுமின்றி தி.மு.க. அமோக வெற்றி பெறும்- அமைச்சர் பெரியசாமி
- வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.
- தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து.
சின்னாளபட்டி:
100 நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், பழனி, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆத்தூர் சட்ட மன்றத்திற்குட்பட்ட பித்தளைப்பட்டி பிரிவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்திற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் கடந்த 4 மாதமாக வழங்க வேண்டிய ரூ.4039 கோடியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. இதனால் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வரவு வைக்கப்படாமல் உள்ளது. கிராமப்புற பெண்கள் இத்தொழில் மூலம் சுய சார்பு நிலையை அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தினசரி ரூ.240 முதல் ரூ.270 வரை சம்பளம் கிடைக்கிறது. வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.
தமிழகத்திற்கு இதேபோல் கல்வி நிதியை வழங்காமலும், மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தும் துறை சார்ந்த அமைச்சருக்கு மனு அளித்தும் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. எனவே மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் பிரதமர் மோடியின் செவிகளுக்கு விழும்வரை எங்களது போராட்டம் தொடரும்.
நிதியை விரைவில் ஒதுக்காவிட்டால் எங்களது அடுத்தகட்ட போராட்டமும் தொடரும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் மீடியா சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுககு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகர் விஜய் கூறியதைபோல தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை. மன்னர் ஆட்சி என்றால் எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியாது. மக்கள் வாக்களித்து அவர்களுக்காக செயல்படும் திராவிட மாடல் அரசாக தி.மு.க. விளக்கி வருகிறது. தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு யாரும் போட்டி கிடையாது. மக்கள் ஆதரவுடன் மீண்டும் வருகிற தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.