தமிழ்நாடு

தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் ஒரகடத்தில் கண்டுபிடிப்பு

Published On 2023-08-10 06:47 GMT   |   Update On 2023-08-10 06:47 GMT
  • அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளது.
  • கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமி எழுத்துகளே பயன்படுத்தப்பட்டன.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள வடக்குப்பட்டு ஊராட்சி பகுதியில் கடந்த மே மாதம் 19-ந் தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இங்கு நடந்த முதல்கட்ட அகழாய்வில் இந்த பகுதி கற்கால கருவிகளை தயார் செய்யும் இடமாக இருந்திருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. இதனை உறுதிப்படுத்த தற்போது 2-ம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொல்லியல் துறை கண்காணிப்பாளர் எம்.காளிமுத்து தலைமையில் இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணியின்போது பல்வேறு தொல் பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளன. விளையாட்டு பொருட்கள், பானை ஓடுகள், கூம்பு வடிவ ஜாடிகள் போன்ற பல பொருட்கள் கிடைத்து உள்ளன. இந்த நிலையில் தற்போது அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 42 பானை ஓடுகள் பல்வேறு தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தளங்களில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவைகளில் பெரும்பாலானவை தென் தமிழ்நாட்டை சேர்ந்தவை. வட தமிழ்நாட்டில் தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கிடைப்பது அரிதானது என்றார்.

மேலும் இதுகுறித்து உதவி தொல்லியல் துறை அதிகாரியான ரமேஷ் கூறும்போது, "காஞ்சீபுரம் மற்றும் பட்டறை பெரும்புதூரில் மட்டுமே எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமி எழுத்துகளே பயன்படுத்தப்பட்டன. எனவே பானை ஓடுகளில் உள்ள கல்வெட்டு இந்த தளத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். தமிழ் மொழியின் தொன்மையை நிரூபிக்க இது முக்கியமானது ஆகும்" என்றார்.

Tags:    

Similar News