தமிழ்நாடு

திருவள்ளூர்- சிங்கபெருமாள் கோவில் இடையே 6 வழிச்சாலை: போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்று வட்டசாலை அமைகிறது

Published On 2023-10-10 07:46 GMT   |   Update On 2023-10-10 07:59 GMT
  • சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
  • புதிய 6 வழிச் சாலைக்கான டெண்டர்களை தமிழ்நாடு ரோடு கட்டமைப்பு வளர்ச்சி கழகம் வெளியிட்டு உள்ளது.

சென்னை:

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதேபோல சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், தனியார் கம்பெனிகள் அதிகளவில் புறநகர் பகுதிகளில் இருப்பதால் கார், இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கிறது.

இதனால் சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நகர எல்லைக்குள் கனரக வாகனமோ, கார், வேன் போன்ற வாகனமோ செல்லாமல் சுற்று வட்டச் சாலையை பயன்படுத்தி கடந்து செல்ல ஏதுவாக தமிழ்நாடு சாலை கட்டமைப்பு முன்னேற்ற கழகம் சார்பாக வெளிவட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை வெளிவட்ட சுற்று சாலை திட்டத்திற்கான திட்ட அறிக்கை 2017-ல் சமர்பிக்கப்பட்டது. இந்திய ரோடு காங்கிரஸ் வழிகாட்டுதலின்படி அது புதுப்பிக்கப்பட வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள் கோவில் இரண்டு வழிச்சாலையில் இருந்து 6 வழிச்சாலையும், ஒரகடம், தொழில்துறை வழித்தடத் திட்டத்தின் கீழ் சர்வீஸ் சாலை அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

133 கி.மீ. நீளமுள்ள சென்னை வெளிவட்ட சுற்று சாலை மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி சந்திப்பில் தொடங்கி சிங்கபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம் தச்சூர் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகம் வழியாக எண்ணூர் துறைமுகம் வரை ரூ.15,626 கோடியில் அமைகிறது. 5 பிரிவுகளாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதற்கட்டமாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தச்சூர் வரையிலான 25.50 கி.மீ. தூரமும், தேசிய நெடுஞ்சாலை 5-ல் உள்ள தச்சசூரில் இருந்து திருவள்ளூர் புறவழிச் சாலை தொடங்கும் வரை 26.25 கி.மீ. மூன்றாவதாக 29.55 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் புறவழிச் சாலையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையும் அமைகிறது. ஸ்ரீபெரும்புதூ ரில் இருந்து சிங்க பெருமாள் கோவில் வரை உள்ள 24.85 கி.மீ. தூரத்திற்கு 4-வது பிரிவு அமைகிறது. 5-வது பிரிவு சிங்க பெருமாள் கோவிலில் இருந்து மகாபலிபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் 27.50 கி.மீ. தூரம் இருக்கும். ஸ்ரீபெரும்புதூர் -சிங்க பெருமாள் கோவில் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை புதுப்பிக்க ஒரு ஆலோகரை நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள் கோவில் பகுதியில் 6 வழிச்சாலை அமைக்கப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் பிரிவு பணிகளின் ஒரு பகுதியாக திருவள்ளூர் பைபாஸ்- வெங்கத்தூர் மற்றும் வெங்கத்தூர் செங்காடு வரையிலான புதிய 6 வழிச்சாலைக்கான டெண்டர் களை தமிழ்நாடு ரோடு கட்டமைப்பு வளர்ச்சி கழகம் வெளியிட்டு உள்ளது.

முந்தைய டெண்டர் ரத்து செய்யப்பட்ட பின்னர் நீட்டிப்புகளுக்கான புதிய டெண்டர் அமைக்கப்பட்டுள்ளன என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News