ரெயில்வே மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு- மு.க.ஸ்டாலினுக்கு ரெயில்வே அமைச்சர் பதில்
- தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
- நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம்.
சென்னை:
தமிழக ரெயில்வே திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கேள்விகள் எழுப்பி நேற்று கடிதம் எழுதினார். அதற்கு மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தனது எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் பதிலளித்து வெளியிட்ட பதிவு வருமாறு:-
தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை முந்தைய ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சராசரி ஒதுக்கீட்டை விட 7 மடங்கு அதிகம். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நிலம் என்பது மாநிலப் பொருளாகும். நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் அரசு எங்களுக்கு ஆதரவளித்தால் மட்டுமே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். 2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம். எங்கள் தரப்பில் இருந்து, நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டிற்கு 2 அடி எடுத்து வைப்போம் என்று உறுதியளிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.