கோத்தகிரியில் வீட்டு கதவை உடைத்து பொருட்களை சூறையாடிய கரடி
- கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
- ஊருக்குள் அடிக்கடி உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அரவேணு:
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்னர்.
இந்நிலையில் கோத்தகிரி அருகே அரவேணு கல்லாடா பகுதியை சேர்ந்த ராஜ்குமார் கோவை சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.
வீட்டின் சமையல் அறையில் இருந்து சத்தம் வந்துள்ளது. உடனடியாக அவர் டார்ச் லைட் அடித்து பார்த்தார். அப்போது கரடி ஒன்று வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை சூறையாடி கொண்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியான அவர் வெளியில் சென்று சத்தம் எழுப்பினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்தனர்.
பின்னர் கரடியை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் கரடி வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்தது.
ஊருக்குள் அடிக்கடி உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கூண்டு வைத்து பிடிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.