என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீலகிரி
- பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.
- திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.
ஊட்டி:
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 27-ந்தேதி தமிழகம் வருகிறார்.
இதற்காக அவர் அன்றைய தினம் காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம், கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்கு செல்கிறார்.
அங்கிருந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை ஜனாதிபதி ஊட்டி ராஜ்பவனில் இருந்து கார் மூலமாக குன்னூருக்கு செல்கிறார்.
ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறும் கல்லூரிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்குகிறார்.
29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில் நீலகிரி வாழ் பழங்குடி மக்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஊட்டி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்து, அங்கிருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து திருவாரூர் சென்று, அங்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். பட்டமளிப்பு முடிந்ததும், மீண்டும் திருச்சி வந்து, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி பயணிக்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி. நிஷா, மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
போலீசார் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, பொதுப்பணித்துறை சார்பில் ராஜ்பவனில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது, நகராட்சி சார்பில் தூய்மை பணி மேற்கொள்வது, சாலை சீரமைப்பு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. அங்கு ஹெலிகாப்டர் தளம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ஹெலிகாப்டர் தளத்தில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அங்குலம், அங்குலமாக சோதனையும் மேற்கொண்டனர். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை சுற்றியுள்ள பகுதியில் வெளியாட்கள் நுழையவும் போலீசார் தடைவிதித்தனர்.
ஜனாபதி வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
தீட்டுக்கல், படகு இல்லம், ஹல்பங்க், கலெக்டர் அலுவலகம், ராஜ்பவன் வரையிலான சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சாலையோர முட்புதர்கள் அகற்றப்பட்டு, சரி செய்யப்பட்டு வருகின்றன. தாவரவியல் பூங்காவிலும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி வருகையை யொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
வாகனங்களில் வருபவர்களிடம் உரிய விசாரணை நடத்தி, அவர்களின் அடையாள அட்டைகளை எல்லாம் வாங்கி பார்த்து சோதித்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
- பள்ளியினையொட்டி வனப்பகுதி உள்ளது.
- மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டையில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் பள்ளி முடிந்ததும் மாலையில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடுவது வழக்கம்.
நேற்று மாலையும் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வழக்கம் போல பள்ளியில் உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடினர். மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர்.
பள்ளியினையொட்டி வனப்பகுதி உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் விளையாடி கொண்டிருந்த நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்த ஒற்றை யானை ஒன்று பள்ளி மைதானத்திற்குள் நுழைந்தது.
யானை வேகமாக வருவதை பார்த்ததும், விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். பின்னர் வகுப்பறைகளில் சென்று பாதுகாப்பாக இருந்து கொண்டனர்.
சிறிது நேரம் யானை மைதானத்திலேயே வலம் வந்தது. அதன்பின்னர் யானை அங்கிருந்து வெளியேறி வனத்திற்குள் சென்றது. யானை சென்ற பின்னரே மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.
காட்டு யானை மைதானத்திற்குள் நுழைந்ததை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சில இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
- மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி கனமழை பெய்கிறது. மேலும் அங்கு மேகமூட்டத்துடன் கடும்குளிரும் நிலவுவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் குன்னூர், அருவங்காடு, வெலிங்டன், காட்டேரி , பர்லியார், கரும்பாலம், சின்னவண்டிச்சோலை, கேத்தி, காட்டேரி, சேலாஸ், வண்டிச்சோலை, எடப்பள்ளி, கொலக்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை விட்டுவிட்டு மழை பெய்தது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் கனமழையாக கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து சென்றது.
மேலும் குன்னூர் நூலக கட்டிட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் அங்குள்ள மின்கம்பம் சேதம் அடைந்ததுடன் மண்திட்டுகள் மழைநீரில் கரைந்து பஸ் நிலையத்திற்கு அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சேறும் சகதியுமாக படிந்து பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதற்கிடையே குன்னூர் மார்க்கெட் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்த வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.
ஓட்டுபட்டறை முத்தாலம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடுப்புசுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல காந்திபுரம் பகுதியில் ருக்மணி என்பவரின் வீட்டில் முன்புற தடுப்புசுவர் இடிந்து விழுந்ததால், அந்த பகுதியில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் தொடர்மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குறும்பாடி அருகே நள்ளிரவு ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி மரத்தை அகற்றினர்.
குன்னூர் தாலுகாவில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சப்-கலெக்டர் மேற்பார்வையில் தாசில்தார் தலைமையில் 10 பேர் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
குன்னூரில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால் அதிகாரிகள் குழுவினர் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளுக்கு சென்று, தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிவாரணக்கூடங்களில் தங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவித்து வருகின்றனர்.
குன்னூர் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே தொடர்மழை, சிறிதுநேரம் வெயில், பின்னர் நீர்ப்பனி என காலநிலை அவ்வப்போது மாறி வருவதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே மலைப்பாதைகளில் செல்லும் வாகனஓட்டிகள் மரங்கள் மற்றும் மண் திட்டுகளுக்கு இடையே வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. மேலும் ஒருசில இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
வடவள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்ததால் கல்வீரம்பாளையம் எஸ்.பி.கே.நகர் பிரதான சாலையில் இருந்த மே பிளவர் மரம் காற்றில் சாய்ந்து அருகில் சென்ற மின்கம்பியின் மீது விழுந்ததில் அந்த மின்கம்பம் முறிந்து சேதமடைந்தது. மேலும் மரத்தின் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது.
தகவல் அறிந்து வந்த மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றி அப்புறப்படுத்தினர். மேலும் உடைந்து விழுந்த மின்கம்பத்தை சரிசெய்யும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
திருப்பதி:
நீராவியில் இயங்கும் ரெயில்கள் என்று கேள்விப்பட்டோம். நிலக்கரியில் இயங்கும் ரெயில்களைப் பார்த்தோம். தற்போது மின்சார ரெயில்களை பார்க்கிறோம். விரைவில் ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில்களைப் பார்க்க உள்ளோம்.
இந்திய ரெயில்வே ஹைட்ரஜன் ரெயிலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. தண்ணீரில் மட்டுமே இயக்கப்படும் இந்த ரெயில் டிசம்பர் மாதத்தில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனி நாட்டில் ஹைட்ரஜன் ரெயில்கள் 2018-ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன. அது போல சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்திய ரெயில்வே ஹைட்ரஜன் ரெயிலை அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது.
இந்த ரெயிலை இயக்க ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன். அதனால் நீராவி மட்டுமே வெளியேறுகிறது.
இந்த ரெயிலை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சத்தமும் மிகக் குறைவு. ஒருமுறை எரிபொருள் தொட்டியை நிரப்பினால், அது 1000 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.
முதலில் ஹரியானாவில் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் ஹைட்ரஜன் ரெயில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டார்ஜிலிங் இமயமலை, ஊட்டி மலை, கல்கா-சிம்லா போன்ற மலைப்பகுதிகளில் ஹைட்ரஜன் ரெயில்களை இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளன.
ஒவ்வொரு ஹைட்ரஜன் ரெயிலையும் உருவாக்க ரூ.80 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக மொத்தம் 35 ஹைட்ரஜன் ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது. டிக்கெட் விலையும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
- வானில் மேகமூட்டத்துடன் குளிர் காற்றும் தொடர்ந்து வீசுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
- குன்னூர் மேல்பாரதி நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட 8 பேர் அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கவைக்கப் பட்டு உள்ளனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இரவில் மட்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கும் நிலை நீடிக்கிறது.
நேற்று காலையில் இருந்து மாலை 6 மணிவரை பெரிய அளவில் மழை இல்லை. சாரல் மழை மட்டுமே பெய்தது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக குன்னூரில் மட்டும் 11 செ.மீ. கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குன்னூரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் கரைபுரண்டோடியது. மேலும் வானில் மேகமூட்டத்துடன் குளிர் காற்றும் தொடர்ந்து வீசுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
இதற்கிடையே நேற்று இரவு 10 மணிமுதல் இன்று காலைவரை குன்னூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு ஒட்டுமொத்த பகுதிகளும் இருளில் மூழ்கியதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
குன்னூர் அருகே உள்ள சின்னாளக்கொம்பை, குரங்குமேடு ஆகிய பகுதியிலுள்ள வீடுகள் கனமழையால் சேதம் அடைந்தன. மேலும் மழைவெள்ளமும் வீட்டுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்தனர்.
இதேபோல மேல் பாரதிநகர், கெரடாலீஸ், மகாலிங்க காலனி, காந்திபுரம், சித்தி விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், பகுதியாகவும் இடிந்து சேதம் அடைந்து உள்ளன. மேலும் பெரும்பாலான பகுதிகளில் தடுப்புச்சுவர் இடிந்ததால் அங்குள்ள குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அங்கு குடியிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். குன்னூர் பெட்போர்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டி ராட்சத தடுப்புசுவர் திடீரென சரிந்து விழுந்ததில், அங்குள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்வதால் ஏற்படும் பாதிப்புகளை வருவாய், நெடுஞ்சாலை மற்றும் போலீசார் அகற்றி வருகின்றனர்.மேலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள குன்னூர் சித்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த குழந்தைகள் உட்பட 9 பேர் வெஸ்லி சர்ச்சில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
குன்னூர் மேல்பாரதி நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட 8 பேர் அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கவைக்கப் பட்டு உள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டு உள்ள அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், குன்னூர் தாலுகாவில் பொதுமக்களுக்காக 150 தற்காலிக நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாகவும் தாசில்தார் கனிசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
குன்னூர் பகுதியில் தொடர்ந்து மேகமூடத்துடன் சாரல்மழை நீடித்து வருவதால் வாகனஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென போலீசாரும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் 24 மணி நேரத்தில் பெய்த மழைஅளவு விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்):- கேத்தி-21 மி.மீ., பரளியார்-30 மி.மீ., குன்னூர் ரூரல்-45 மி.மீ., எடப்பள்ளி-55 மி.மீ, பில்லிமலை-4.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- பல குடியிருப்புகளை ஒட்டியுள்ள படிக்கட்டுகளில் மழைநீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டி குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
- மாவட்ட நிர்வாகம் சார்பில் 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு 2-வது நாளாக அங்கு கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. மாடல்ஹவுஸ் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு வசித்தவர்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளானார்கள். அவர்கள் வீடுகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு இரவை கழித்தனர்.
பல குடியிருப்புகளை ஒட்டியுள்ள படிக்கட்டுகளில் மழைநீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டி குடியிருப்புகளுக்குள் புகுந்தது. நேற்று இரவும் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்தன. அதிகபட்சமாக குன்னூரில் 9.6 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
மழை காரணமாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவு 10 மணியில் இன்று காலை வரை குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குறும்பாடி, சப்ளை, டிப்போ, காட்டேரி, வண்ணாரப்பேட்டை , வண்டிச்சோலை மவுண்ட் பிளசென்ட் உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தும், மண் சரிவும் ஏற்பட்டன. தீயணைப்புத் துறையினர் உடனடியாக சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
கனமழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதுவரை 16 இடங்களில் மரம் விழுந்தும், 7 வீடுகள் இடிந்தும் உள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பில் 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. நான்கு மண்டலமாக மீட்பு குழுவினர் பிரிக்கப்பட்டு 3500 பேர் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்தார்.
குன்னூர் அருகே உள்ள யானை பள்ளம் ஆதிவாசி கிராமத்துக்கு செல்லும் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததுடன் மண் மற்றும் மரங்களும் சரிந்து விழுந்தது. இதனால் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் அத்தியாவசிய தேவைக்கு கூட மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற இயலாமல் பாதிப்புக்குள்ளாகினர்.
இதனை தொடர்ந்து குன்னூர் தாசில்தார் கனி சுந்தரம் தலைமையில் வருவாய் ஆய்வாளர் செங்கோடன், தீயணைப்பு துறை நிலை அலுவலர் குமார், நெடுஞ்சாலைத்துறை பாலச்சந்திரன் மற்றும் உலிக்கல் பேரூராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்று ஜே.சி.பி எந்திரம் உதவியுடன் பாறைகள், மண் குவியல்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தினர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் இந்திரா நகர் என்ற இடத்தில் நேற்று மாலை திடீரென பாறை உண்டு விழுந்தது. இதனை ஜே.சி.பி. உதவியுடன் அகற்றினர். மேலும் காட்டேரி , கரும்பாலம் இடையே ஏற்பட்ட மண் சரிவை குன்னூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேற்பார்வையில் அப்புறப்படுத்தப்பட்டது. ஆப்பிள் பி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
- பாறாங்கற்கள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன.
- ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கோவை மாவட்டம் கல்லாறு, மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது.
பாறாங்கற்கள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. மண் சரிந்து தண்டவாளத்தை மூடியது. மரங்கள் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலைரெயில் சேவையை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று ரத்து செய்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் மலைரெயில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையே ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் பணியை உடனடியாக முடிக்க முடியவில்லை. இதனால் இன்று(திங்கட்கிழமை), நாளை(செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு மலைரெயில் இயங்காது என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
சீரமைப்பு பணி முடிவடைந்த பிறகு மீண்டும் மலைரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
- கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேர்தில் குன்னூரில் 10 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று நீலகிரி கலெக்டர் விடுமுறை அறிவித்துள்ளார்.
- ஊட்டி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- மோட்டார் படகு உள்ளிட்டவற்றில் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
நீலகிரி:
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை தொடர்ந்து அரசு விடுமுறை, வார இறுதி நாட்கள் உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், பொதுமக்கள் விடுமுறையை கொண்டாட குடும்பத்தோடு சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கல் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றிலா பயணிகள், அங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களை கண்டுகளித்தனர். குறிப்பாக படகு இல்லத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள், மிதிபடகு, துடுப்பு படகு, மோட்டார் படகு உள்ளிட்டவற்றில் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால், ஊட்டி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நாளை ஞாயிறு விடுமுறை என்பதால், ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
- நீலகிரி வழியாக வயநாடு சென்ற அவர், கல்லூரி மாணவர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. இவரது மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி முதன்முறையாக தேர்தலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களம் நிறுத்தப்பட்டுள்ளார். இன்று அவர் வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் வந்தடைந்தார். நீலகிரி வந்த அவர் கல்லூரி மாணவர்களை சந்தித்தார். அவரை பார்ப்பதற்காக கல்லூரி மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.
அவர்களுடன் புன்னகைத்தவாறு கைக்கொடுத்து சென்றார். நீலகிரியில் இருந்து வயநாடு தொகுதி செல்லும் பிரியங்கா காந்தி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
#WATCH | Nilgiris, Tamil Nadu: Congress leader and party's candidate for Wayanad Lok Sabha by-election, Priyanka Gandhi Vadra meets students of Nilgiri college(Source: Congress) pic.twitter.com/1Jr17pdKoD
— ANI (@ANI) October 28, 2024
ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக வருகிற 13-ந்தேதி வயநாட்டிற்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
- முதியவரை மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- திருடன் தப்பி ஓட்டம்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த திருடன் முதியவரை பிடித்து வைத்துக்கொண்டு கொலை செய்துவிடுவதாக அக்கம் பக்கத்தினரை மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கிராமத்தில் ஐயாமுத்து என்ற 86 வயதுடைய முதியவர், அவருடைய மனைவி லட்சுமி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
திடீரென நேற்று இரவு அதேபகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் வீட்டிற்குள் நுழைந்து திருட முயற்சித்துள்ளார். இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். அப்போது வயதானவரை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்ததும் முதியவரை காப்பாற்றுவது போல் நடித்துள்ளர். அருகில் உள்ள பொருட்களை எடுத்து வீசியும், முதியவரின் கழுத்த பிடித்து இறுக்கியும் மிரட்டல் விடுத்தார்.
அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்ததும் சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது பலத்த காயம் அடைந்த முதியவர் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
- கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி, தாசில்தார் அலுவலகம் உள்பட பொது இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியானது உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு உள்பட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
இங்கு வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் சமீபத்தில்தான் ரூ.3 கோடியில் புதிய அவசர சிகிச்சை பிரிவு கட்டப்பட்டது. இந்தநிலையில் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்குள் தெருநாய் ஒன்று புகுந்தது. தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கையில் ஏறி படுத்து ஓய்வெடுத்தது.
இதை அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி, தாசில்தார் அலுவலகம் உள்பட பொது இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவுதான், தற்போது நோயாளிகளின் படுக்கையில் தெருநாய் படுத்து ஓய்வெடுத்த சம்பவமும்.
எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்