தமிழ்நாடு

காலை சிற்றுண்டி திட்டம்- குழந்தைகளுக்கு உணவு வழங்கி தரத்தை ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின்

Published On 2022-12-23 05:28 GMT   |   Update On 2022-12-23 06:33 GMT
  • திண்டுக்கல் மாநகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
  • பள்ளியில் கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் எவ்வாறு உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல்:

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசுமுறை பயணமாக திண்டுக்கல் வருகை தந்தார்.

இன்று காலை திண்டுக்கல் மாநகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார்.

குழந்தைகளுக்கு தானே உணவு வழங்கி அந்த உணவின் தரத்தையும் ஆய்வு செய்தனர். குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு தினமும் நல்ல உணவு வழங்கப்படுகிறதா? என குழந்தைகளிடம் கேட்டார். அதற்கு குழந்தைகள் நன்றாக உணவு தயாரித்து குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளி வந்தவுடன் கிடைக்கிறது என்று தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். பின்னர் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் பள்ளியில் கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் எவ்வாறு உள்ளது என ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினர்.

அதன்பின் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடி என்னென்ன வசதிகள் தேவை என்பதை கேட்டறிந்தார். அதனை உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அதன்பின் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் தி.மு.க. கட்சி கொடி ஏற்றி வைத்து இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான அடையாள அட்டைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து வாலிபால் மைனதானத்தின் கேலரிக்கான அடிக்கல்லை நட்டு வைத்தார். பின்னர் வேடசந்தூரில் நடந்த தி.மு.க. கொடியேற்று விழாவில் பங்கேற்றார். பிற்பகலில் இடைய கோட்டையில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக 117 ஏக்கரில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்கிறார்.

இன்று மாலையில் திண்டுக்கல்லில் நடக்கும் நிகழ்ச்சியில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து சிறுமலை பிரிவு, சாணார்பட்டி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குகிறார்.

முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான கொடைரோடு சுங்கச்சாவடி பகுதியில் அமைச்சர்கள் இ.பெரி யசாமி, அர.சக்கரபாணி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News