தலைமைச் செயலகத்தை முற்றுகையிட புறப்பட்ட விவசாயிகள் கைது
- அய்யாக்கண்ணு மற்றும் மாநில துணைத்தலைவர் , சதாசிவம், கென்னடி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும் போது, ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு உரிமை உள்ளது.
திருச்சி:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்காததை கண்டித்து மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு தொகை தருவதாக கூறி வழங்காத மத்திய அரசை கண்டித்து பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக 120 விவசாயிகள் வாரணாசி புறப்பட்டனர்.
அவர்களை செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து இன்று(புதன்கிழமை) சென்னை சாஸ்திரி பவன் மற்றும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அய்யாக்கண்ணு அறிவித்தார்.
இதையடுத்து நேற்று மதியம் முதல் அய்யாக்கண்ணு சென்னை செல்வதை தடுப்பதற்காக திருச்சி அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பல்லவன் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை புறப்பட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் தயாரானார்கள். இதையடுத்து அய்யாக்கண்ணு மற்றும் மாநில துணைத்தலைவர் மேகராஜன், நிர்வாகிகள் உமா காந்த், உத்தண்டன், வெற்றிவேல், சதாசிவம், மதிமன்னன், ராஜேந்திரன், கென்னடி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்பு அவர்களை உறையூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதுபற்றி அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும் போது, ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு உரிமை உள்ளது.
எங்களுக்கு போராட்டம் நடத்துவதற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி போலீசார் கைது செய்துள்ளனர். ஆகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறேன் என்றார்.