தமிழ்நாடு

கொடைக்கானலில் போதை காளான்களை பறிக்கும் வாலிபர்.

கொடைக்கானலில் போதை காளான்களை பறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட கும்பல்

Published On 2022-12-30 09:02 GMT   |   Update On 2022-12-30 09:02 GMT
  • போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் போலீசார் பல வழக்குகள் பதிவு செய்தும் இதுவரை இந்த கலாச்சாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை.
  • காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலேயே பயன்படுத்துகின்றனர்.

கொடைக்கானல்:

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்காக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருபுறம் இருந்தாலும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதற்காக சில இளைஞர்கள் வருவதும் வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக கொடைக்கானலில் இயற்கையாக இருக்கக்கூடிய போதைக் காளான் என்ற போதை பொருள் புல்வெளிகளிலும், காடுகளிலும் வளர்ந்து வருகிறது. பல வகையான காளான்கள் கொடைக்கானலில் விளைகிறது. கொடைக்கானலில் மட்டும் இதுவரை 400 வகைகளுக்கு மேலாக காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் போதைக்காளானும் ஒரு வகையாகும். இவை மட்டுமல்லாது உணவுக்காக எடுத்துக் கொள்ளக்கூடிய காளான் வகைகள் மற்றும் விஷத்தன்மை உடைய காளான்களும் இங்கு இயற்கையாகவே கிடைக்கிறது.

போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் போலீசார் பல வழக்குகள் பதிவு செய்தும் இதுவரை இந்த கலாச்சாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை. இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய இளைஞர்கள் மத்தியில் போதை காளான் பிரபலமடைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் இளைஞர்கள் பலர் வனப்பகுதிகளிலும், புல்வெளிகள் நிறைந்த பகுதிகளிலும் போதை காளான்களை தேடி சென்று அதனை பறிப்பது போன்று வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

அவ்வாறு பறிக்கப்படும் காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலேயே அவர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் இதுபோன்ற வீடியோக்கள் பல இளைஞர்களால் கவரப்பட்டு வருகிறது. இதற்கு சமூக வலைதள பக்கங்களும் உதவியாக உள்ளது.

இதனை சைபர் கிரைம் போலீசார் முழுவதுமாக கண்காணிக்க வேண்டும். தற்போது தொடர் விடுமுறையால் இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். இவர்களிடம் போதைக்காளான் குறித்த தகவல் வந்தால் அவர்களும் இதற்கு அடிமையாகும் நிலை ஏற்படும். எனவே போதைக் காளான் கலாச்சாரத்தை ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Tags:    

Similar News