தமிழ்நாடு

மிஸ் சென்னை திருநங்கையாக சேலம் பிரகதீஷ் சிவம் தேர்வு. (நடுவில்) சென்னை வைசு (வலது) 2-ம் இடத்தையும், தூத்துக்குடி பியுலா (இடது) 3-ம் இடத்தையும் தட்டி சென்றனர்.

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது

Published On 2023-05-01 10:07 GMT   |   Update On 2023-05-01 10:07 GMT
  • சித்திரை பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு மேடையில் தோன்றி ஒய்யாரமாக வலம் வந்தனர்.

உளுந்தூர்பேட்டை:

கூவாகத்தில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

மகாபாரத போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதில் திருநங்கைகளுக்கு மண முடித்தல், தேரோட்டம், தாலி அறுத்து அழுகளம் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து திருநங்கைகள் திரளாக கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியை இந்த ஆண்டு உளுந்தூர்பேட்டையிலும், விழுப்புரத்திலும் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி இன்று காலை 2 சுற்று போட்டிகள் உளுந்தூர் பேட்டையில் நடைபெற்றது. இதற்கிடையே சென்னையை சேர்ந்த திருநங்கைகளுக்கான அமைப்பு சார்பில் நேற்று விழுப்புரத்தில் அழகிப்போட்டி நடைபெற்றது.

இதை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு மேடையில் தோன்றி ஒய்யாரமாக வலம் வந்தனர்.

இவர்களில் நடை, உடை, பாவனை அடிப்படையிலும், பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் மிஸ் திருநங்கையாக சேலம் பிரகதீஷ் சிவம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை வைசு 2-வது இடத்தையும், தூத்துக்குடி பியூலா 3-வது இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நடிகர் பிரித்விராஜ், நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மிஸ் கூவாகம் இறுதி அழகிப்போட்டி விழுப்புரத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் திருநங்கைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருநங்கைகள் தாலிகட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் காலை தேரோட்டமும் அன்று மாலை பந்தலடியில் பாரதம் படைத்தலும், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதலும் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூவாகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News