தமிழ்நாடு

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2023-01-07 06:43 GMT   |   Update On 2023-01-07 07:28 GMT
  • குறிஞ்சிச்செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக வளரும் ஒரு செடியாகும்.
  • கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் அரியவகை மலரான 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் பூப்பது அபூர்வ நிகழ்வாக உள்ளது. குறிஞ்சியில் கல் குறிஞ்சி, சிறு குறிஞ்சி, நெடுங்குறிஞ்சி, நீலக்குறிஞ்சி எனப்பல வகைகள் உண்டு. இவற்றில் நீலக்குறிஞ்சி மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலைப்பகுதிகளில் பூக்கும் மலர் ஆகும்.

குறிஞ்சிச்செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக்குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது.

30-க்கும் மேற்பட்ட இவ்வகை மலர்கள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன. பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் "குறிஞ்சி" திணையாகக் குறிக்கப்படுகின்றன. இதன்மூலம் தமிழர்களின் வாழ்வியல் முறை நிலத்தை ஒட்டியே இருந்தது என்பது உறுதியாகும்.

கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, 12 வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும். இதற்கு ஏற்றத் தட்பவெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரையிலும் வளரும்.

1994-ஆம் ஆண்டில் பூத்த இச்செடி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலும் கேரளாவிலும் 2006-ஆம் ஆண்டில் பூத்தது. அதன்பிறகு 2018-ம் ஆண்டில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கிய நிலையில் தற்போது மற்றொரு வகையான குறிஞ்சி மலர்கள் 2023-ம் ஆண்டில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் பூத்து குலுங்கி வருகிறது.

மணி போன்ற வடிவம் கொண்ட குறிஞ்சி மலர்கள் மலைச் சரிவுகளில் பூத்துக்குலுங்கி மலைப் பகுதிகளுக்குப் புதிய வண்ணங்களைத் தீட்டி வருகின்றன.

இயற்கையாக வளரும் இவ்வகை செடிகளை பறித்து தனியார் தோட்டங்களிலும் சிலர் வளர்த்து வருகின்றனர். தற்போது அவ்வகை செடிகளில் பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது. இதனை கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Tags:    

Similar News