தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவா்களுக்கு 'நீட்' பயிற்சி மீண்டும் தொடக்கம்

Published On 2024-04-29 03:54 GMT   |   Update On 2024-04-29 05:21 GMT
  • இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
  • கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை:

பொதுத் தோ்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயிற்சி வகுப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 5-ந்தேதி நடை பெறவுள்ளது.

இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 969 மாணவா்களும், சென்னையில் 827 மாணவா்களும், திருவண்ணாமலை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தலா 730 மாணவா்களும் விண்ணப்பித்துள்ளனா்.

அவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு நேரடியாக நடைபெற்று வருகிறது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் பயிற்சிகளை வழங்குவதற்காக இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடங்களிலும் சிறந்து விளங்கும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சுழற்சி முறையில் பாடங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மையங்களிலும் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீா் மற்றும் மதிய உணவு மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. பயிற்சி மையங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்புதல் தோ்வுகளும், வாராந்திரத் தோ்வுகளும் நடைபெறுகின்றன.

Tags:    

Similar News