என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்.
    • மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கவர்னரை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதாக்களை தமிழக அரசு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தது. தற்போது இந்த இரண்டு மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் நிலுவையில் வைத்திருப்பது சட்ட விரோதம் என ஏப்ரல் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. தீர்ப்பளித்த அடுத்த நாளே இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    • மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்களும் வந்தது.
    • ஒரு சிலர் தானாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மத்திய பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்தநிலையில் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இது தொடர்பாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்களும் வந்தது.

    இதையடுத்து இன்று திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாவலர்கள் மூலம் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தையும் அகற்றினர். ஒரு சிலர் தானாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

    • விவசாயிகளுக்கு இந்தாண்டில் புதிதாக 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும்.
    • வழுதூர் எரிவாயு மின் நிலையத்தில் வெப்ப எரிவாயு பாதை ரூ.111 கோடியில் மேம்படுத்தப்படும்.

    சட்டசபையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:

    * தூத்துக்குடியில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும்.

    * கடலோர நகரங்களில் மேல்நிலை மின்கம்பிகள் புதைவடமாக மாற்றப்படும்.

    * விவசாயிகளுக்கு இந்தாண்டில் புதிதாக 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும்.

    * தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ரூ.215 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

    * தேரோடும் வீதிகளில் உள்ள மேல்நிலை மின்பாதைகள் ரூ.56.89 கோடியில் புதைவடங்களாக மாற்றப்படும்.

    * திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மேல்நிலை மின் பாதைகள் புதைவடங்களாக மாற்றப்படும்.

    * 26 துணை மின் நிலையங்களில் ரூ.55 கோடியில் மின் மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும்.

    * தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை அனல் மின் நிலையங்களில் ரூ.500 கோடியில் மின் உற்பத்தி மூலதனப்பணி மேற்கொள்ளப்படும்.

    * வழுதூர் எரிவாயு மின் நிலையத்தில் வெப்ப எரிவாயு பாதை ரூ.111 கோடியில் மேம்படுத்தப்படும்.

    * மின்சாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த மாதம் முதல் 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் பயனடைவார்கள்.

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தப் பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், ஆக மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

    தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூபாய் 2000, விற்பனையாளர்களுக்கு

    ரூபாய் 2000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, 01.04.2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 64.08 கோடி கூடுதல் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அந்த பெண், பல தவணைகளாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் 8 ½ பவுன் தங்க நகையையும் கொடுத்திருக்கிறார்.
    • பெண் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், கோவை பூ மார்க்கெட் தியாகராஜா தெருவைச் சேர்ந்தவர் பாக்கிய அருண் (26 ) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பாக்கிய அருண், அந்த பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.

    இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து அவருடன் பழகி வந்துள்ளார். அப்போது பாக்கிய அருண், புதிய தொழில் தொடங்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    இதற்காக அந்த பெண், பல தவணைகளாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் 8 ½ பவுன் தங்க நகையையும் கொடுத்திருக்கிறார்.

    பணம்- நகையை பெற்றுக்கொண்ட பாக்கிய அருண், அந்த பெண்ணை சந்திப்பதை தவிர்த்துள்ளார். அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்ததுடன் நகை- பணத்தையும் திரும்ப கொடுக்க மறுத்துள்ளார்.

    சம்பவத்தன்று பீளமேடு அருகில் பாக்கிய அருணை சந்தித்த அந்த பெண், நகை- பணத்தை கேட்டுள்ளார். அதற்கு பாக்கிய அருண், அந்த பெண்ணை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண் பீளமேடு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து பாக்கியஅருணை கைது செய்து சிறையில் அடைத்தார். பாக்கிய அருண் சமீபகாலமாக கோவை ரெட்பீல்ட் பகுதியில் வசித்து வந்துள்ளார். 

    • கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • கர்சன் செல்வத்திடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

    இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஜாமினில் உள்ளனர்.

    இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது.

    இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக கோத்தகிரியை சேர்ந்த கர்சன் செல்வம் என்பவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர்.

    அதன்படி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கர்சன் செல்வம் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முக்கிய குற்றவாளியான சயானுக்கும் வருகிற 24-ந் தேதி நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    • விஷ்ணுவின் தலையில் பலத்த காயமடைந்தது.
    • அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் விஷ்ணு (15). அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த விஷ்ணு கடந்த 15-ந்தேதி அரசு பொதுத்தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வாணாபுரம் புத்துமாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விஷ்ணுவின் சைக்கிள் மீது மோதியது. இதில் விஷ்ணுவின் தலையில் பலத்த காயமடைந்தது.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகிய 2 பேர் மீதும் பகண்டை கூட்டுச்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • விளையாட்டுத் துறையிலும் மாற்றுத்திறனாளிகள் சாதிக்க நம்முடைய அரசு தொடர்ந்து துணை நிற்கும்.
    • போட்டியில் பங்கேற்பதற்கு முன்பே பயிற்சிக் கட்டணம், பயண கட்டணம் ஆகியவை நம்முடைய அறக்கட்டளை மூலம் நிதி உதவிகளை அளித்து வருகின்றோம்.

    சென்னை:

    சட்டபேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் தொடர்பான கேள்விக்கு அளித்த பதில் விவரம் வருமாறு:-

    கடந்த ஆண்டு சட்டமன்றப் பேரவையில் நான் பேசும்போது, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில் மாற்றுத்திறனாளி வீரர்கள் உட்பட 100 விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.

    அதன்படி பொதுத்துறை நிறுவனங்களிலும், அரசுத்துறைகளிலும் 104 வீரர்களுக்கு சென்ற ஆண்டு மட்டும் வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.

    அதேபோல இந்த ஆண்டும் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மேலும் 100 விளையாட்டு வீரர்களுக்கு கண்டிப்பாக 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    மற்ற துறைகளைப் போலவே, விளையாட்டுத் துறையிலும் மாற்றுத்திறனாளிகள் சாதிக்க நம்முடைய அரசு தொடர்ந்து துணை நிற்கும். போட்டியில் பங்கேற்பதற்கு முன்பே பயிற்சிக் கட்டணம், பயண கட்டணம் ஆகியவை நம்முடைய அறக்கட்டளை மூலம் நிதி உதவிகளை அளித்து வருகின்றோம்.

    மற்ற வீரர்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கி வருகின்றோம். இதுவரை இந்த 104 நபர்களுக்கு கொடுத்திருக்கிறோம். அதில் 5 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசுத்துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குப்பை கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான பூபதியை ஆத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் வசிக்கும் அனிதா என்பவர் பக்கத்து வீட்டு அருகே குப்பை கொட்டியதால் அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் மோதல் ஏற்பட்டது.

    குப்பை கொட்டியதில் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார். இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த தகராறு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் என்பவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் குப்பை கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பாலமுருகன், அவரது மனைவி செல்வி, உறவினர் அன்பரசி கைது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லாரியை ஏற்றி கொல்ல முயன்ற பாலமுருகன், அவரை தூண்டிவிட்ட அன்பரசி, பூபதி, கதிரவன் ஆகியோர் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்து சேதம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான பூபதியை ஆத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

    இதனால் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று முதல் 26-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

    இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25ம் தேதி மோதுகிறது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி பெற்றுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

    புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (4 புள்ளி), எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் (16 புள்ளி) மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒரு வேளை 5ல் மட்டும் வென்றால் (14), மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25ம் தேதி மோதுகிறது.

    இந்நிலையில், சி.எஸ்.கே அணி நிச்சயம் மீண்டு வரும் என்று அந்த அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்சியில் பேசிய காசி விஸ்வநாதன், "நடப்பு சீசனில் சி.எஸ்.கே. அணியின் ஆட்டத்தால் நீங்கள் அதிருப்தியாக இருப்பீர்கள். ஆனால் விளையாட்டில் இது சகஜம். இப்போது நன்றாக விளையாடவில்லை என்பது உண்மைதான். நிச்சயம் மீண்டு வருவோம். வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் எங்கள் பாய்ஸ் உறுதியாக உள்ளனர்" என்று தெரிவித்தார். 

    • ஊட்டியில் வரும் 25, 26-ந்தேதிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
    • பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 25, 26-ந்தேதிகளில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    துணைவேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீலகிரியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த உள்ள நிலையில், இந்த மாநாட்டிற்கு அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ×