என் மலர்
கோயம்புத்தூர்
- போராட்டம் காரணமாக ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை.
- கடையடைப்பு போராட்டம், தேயிலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தாலும், வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கின.
வால்பாறை:
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.
இந்த அறிவிப்பு வெளியான தினத்தில் இருந்து 60 நாட்களுக்குள் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக வால்பாறையில் வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் உணர்திறன் அறிவிப்பை ரத்து செய்ய கோரி வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிற்சங்கங்கள் தரப்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தங்கள் பணியை புறக்கணித்து, ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், கார், ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் வால்பாறை நகரில் உள்ள ஜவுளிக்கடைகள், மளிகை கடைகள், டீக்கடைகள் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. நகராட்சி மார்க்கெட்டில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
இந்த கடையப்பு போராட்டம் காரணமாக வால்பாறையில் உள்ள நகராட்சி மார்க்கெட் மற்றும் கடைவீதி பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை.
இதேபோல் வால்பாறை நகரை சுற்றியுள்ள முடீஸ், சோலையார் அணை உள்பட வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் எஸ்டேட்டுகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
கடையடைப்பு போராட்டம், தேயிலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தாலும், வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கின.
- யாகசாலை அமைப்பது, வர்ணம்பூசும் பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகின்றன.
- மருதமலை முருகன் கோவிலில் 1-ந்தேதி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வடவள்ளி:
கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மருதமலை முருகன் கோவிலில் வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதனையொட்டி கோவிலில் கும்பாபிஷேக விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. யாகசாலை அமைப்பது, வர்ணம்பூசும் பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகின்றன.
மேலும் அமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அறங்காவலர் குழுவினர் கும்பாபிஷேக அழைப்பிதழையும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் 1-ந்தேதி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஏப்ரல் 1-ந்தேதி மாலை 5 மணிக்கு மேல் கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில் சக்தி கலசங்களை வைத்து பூஜை செய்யப்பட உள்ளது. இதனால் அன்றைய தினம் மாலை 5 மணி முதல் 3-ந்தேதி வரை பக்தர்கள் அனைவரும் யாகசாலையில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை யாக சாலையில் தரிசனம் செய்யலாம்.
ஏப்ரல் 4-ந்தேதி கும்பாபிஷேக விழா முடிந்ததும் மீண்டும் வழக்கமான நடைமுறையில், பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு சன்னதிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வருகிற 4-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை 3 நாட்கள் மலை மீது இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.
பக்தர்கள் படிக்கட்டு வழியாகவும், கோவில் பஸ்கள் மூலமாகவும் மலைக்கோவிலுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச விமானங்களில் 23 ஆயிரத்து 641 பயணிகளும், உள்நாட்டு விமானங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 பயணிகளும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 678 பேர் பயணம் செய்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் 2-வது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருந்து வருகிறது.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 30 விமானங்கள் சேவை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் விமான இயக்கங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற விமான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து குறித்த விவரங்களை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி கோவை விமான நிலையத்தில் இருந்து பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 179 சர்வதேச விமானங்களும், 1,651 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 1,830 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
இது கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 21.43 சதவீதம் அதிகமாகும்.
சர்வதேச விமானங்களில் 23 ஆயிரத்து 641 பயணிகளும், உள்நாட்டு விமானங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 பயணிகளும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 678 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 31.23 சதவீதம் கூடுதலாகும்.
இதேபோல சர்வதேச விமானங்களில் 180.1 மெட்ரிக் டன் சரக்குகளும், உள்நாட்டு விமானங்களில் 764.7 மெட்ரிக் டன் சரக்குகளும் என மொத்தம் 944.8 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 19.52 சதவீதம் அதிகமாகும்.
தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் 2-வது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருந்து வருவதாகவும், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விமான நிலைய முனையத்தை விரைவாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- போலீசார் சுற்றி வளைத்து 7 பேர் கும்பலையும் பிடித்தனர்.
- சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் கஞ்சா, போதைப்பொருள் விற்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகர போலீசாருக்கு கோவை மாநகர பகுதிகளில் உயர் ரக போதைப்பொருட்கள் விற்க கும்பல் ஒன்று இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் தனபால் தலைமையிலான போலீசார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மேட்டுப்பாளையம் ரோடு பூமார்க்கெட், அம்மா உணவகம் கேட் அருகே சந்தேகத்திற்கிடமாக 7 பேர் நின்றிருந்தனர்.
இதை பார்த்த போலீசார் அவர்களின் அருகில் சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து 7 பேர் கும்பலையும் பிடித்தனர். பின்னர் அவர்களை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் எம்.டி.எம்.ஏ. பவுடர், கொகைன், கிரீன் கஞ்சா, உலர்ந்த கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருள் இருந்தது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், இவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி இத்தலார் போத்தியாடா பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது39), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஆனந்தூரை சேர்ந்த விநாயகம் (34), கோவை பி.என்.பாளையம் கிருஷ்ணகாந்த் (35), வடவள்ளி மகாவிஷ்ணு (28), சுங்கம் பைபாஸ் ஆதர்ஷ் (24), நஞ்சுண்டாபுரம் ரித்தேஷ் லம்பா (41), ரோகன் செட்டி (30) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.
கைதான மணி கண்டன் என்பவர், நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த ரிதேஷ் லம்பா மூலமாக மகராஷ்டிராவை சேர்ந்த ஜேக்கப் பிராங்களின் என்பவரிடம் இருந்து எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள் மற்றும் கொகைன் வாங்கி, இவர்களுடன் சேர்ந்து இங்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் கிரிஷ் ரோகன் செட்டி என்பவர் இமாச்சல பிரதேசத்தில் இருந்து கஞ்சா மற்றும் கிரீன் கஞ்சா, உயர் ரக போதைப்பொருட்களை கோவைக்கு வாங்கி வந்து, அதனை இங்கு பதுக்கி வைத்ததும், அதனை கோவையில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
போதைப்பொருள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அவர்கள் அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்று சம்பாதித்த பணத்தில் கோவைப்புதூரில் புதிதாக ஒரு வீடு கட்டி வருகின்றனர். அத்துடன் காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் புதிதாக வீடும், ஒரு வீட்டு மனை வாங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
மேலும் போதைப்பொருள் விற்று அதில் சம்பாதித்த அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு 12 வங்கி கணக்குகள் இருப்பதை கண்டுபிடித்துள்ள போலீசார், அதனை முடக்குவதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.
கைதானவர்களில் மகாவிஷ்ணு என்பவர் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் விஜயலட்சுமியின் மகன் ஆவார்.
கைதானவர்களிடம் இருந்து போலீசார் 24.40 கிராம் எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள், 12.47 கிராம் எம்.டி.எம்.ஏ. பவுடர், 92.43 கிராம் கொகைன், 1.620 கிலோ கிரீன் கஞ்சா, 1 கிலோ 16 கிராம் உலர்ந்த கஞ்சா மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கப்பணம், பணம் எண்ணும் எந்திரம், போதை பொருள் எடை பார்க்கும் எந்திரம், பீர் பாட்டில்கள், 3 கார்கள், 12 செல்போன்கள் என ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- மலை ரெயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- மேட்டுப்பாளையத்தில் இருந்து கோடைகால சிறப்பு மலை ரெயில் இன்று காலை 9.10 மணிக்கு புறப்பட்டது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நூற்றாண்டு பழமையான இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு கோடைகால விடுமுறை நாட்களில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இருமார்க்கங்களிலும் மார்ச் 28-ந்தேதி முதல் ஜூலை 6-ந்தேதி வரை வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து கோடைகால சிறப்பு மலை ரெயில் இன்று காலை 9.10 மணிக்கு புறப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
மேலும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடைக்கால சிறப்பு மலை ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு மலை ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடையும். அதேபோல சனி மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் சிறப்பு மலை ரெயில், மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர்.
- வியாபாரிகள் விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் கூடுதல் விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். அதன்படி நேற்று காலை ஆட்டுச்சந்தை தொடங்கியது.
இதற்காக பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெள்ளாடு, செம்மறியாடு உள்பட சுமார் 800-க்கும் மேற்பட்டவவை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.
மேலும் சிலர் ஆட்டுக்குட்டிகளையும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ரம்ஜான் பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுவதால், பொள்ளாச்சி சந்தையில் சுமார் 800 முதல் 1000 வரையிலான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.
மேலும் அவற்றை வாங்கி செல்வதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். இதன்காரணமாக பொள்ளாச்சி சந்தையில் ஆடுகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
தொடர்ந்து அங்கு 8 கிலோ முதல் 25 கிலோ வரையிலான ஆடுகள் எடைக்கு ஏற்ப தரம் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதாவது 8 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5500 வரையும், 20 கிலோ ஆடு ரூ.16-17 ஆயிரம் வரையும், 25 கிலோ ஆடு ரூ.22 ஆயிரம் வரையும் விலை போனது.
பொள்ளாச்சி சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடுகளின் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் அவற்றின் விலையில் சிறிதும் சரிவு ஏற்படவில்லை. இருந்தபோதிலும் வியாபாரிகள் விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் கூடுதல் விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர்.
இதன் காரணமாக பொள்ளாச்சி ஆட்டுச்சந்தையில் நேற்று மட்டும் ரூ.80 லட்சம் வரை ஆடுகளின் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
- கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை.
- 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என அறிவிப்பு.
தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு காரில் வந்தார்.
- இந்த வழக்கில் மேலும் சில முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது.
கடந்த 2017-ல் இங்கு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை 300-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி, அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து பலரிடமும் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுமான சுதாகரனிடம் விசாரணை நடத்துவதற்காக, சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியிருந்தனர். அதில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று சுதாகரன் விசாரணைக்கு ஆஜரானார். கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு காரில் வந்தார்.
பின்னர் அவர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்குள் சென்றார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடநாட்டின் முன்னாள் பங்குதாரர் என்பதால், பங்களாவில் என்னென்ன இருந்தது. கொடநாடு பங்களாவில் கொள்ளை போனது குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என பல்வேறு கேள்விகளையும் கேட்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் தனக்கு தெரிந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்தார். அதனை போலீசார் பதிவு செய்து கொண்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர். இந்த வழக்கில் மேலும் சில முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியம் அவரிடம் பேசி உள்ளார்.
- லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுப்பிரமணியத்தை கைது செய்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நகரமைப்பு பிரிவில் உதவியாளராக சுப்பிரமணியம் என்பவர் (48) பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார். அப்போது புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியம் அவரிடம் பேசி உள்ளார்.
பின்னர் இறுதியாக ரூ.30 ஆயிரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் லஞ்ச பணம் கொடுக்க மனம் இல்லாத வருண் இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி வருண் இன்று காலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். வருண் ரசாயனம் தடவிய பணத்தை சுப்பிரமணியனிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி. ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சுப்பிரமணியத்தை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுப்பிரமணியத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது.
- பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி முன்னிலை வகித்தார்.
- விழாவில் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வடவள்ளி:
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தில் உள்ள பட்டமளிப்பு விழா அரங்கில் இன்று நடந்தது.
விழாவுக்கு கவர்னரும், வேளாண் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி முன்னிலை வகித்தார்.
இதில் முதன்மை விருந்தினராக, சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் மொத்தம் 4 ஆயிரத்து 434 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
அதன்படி இளம் அறிவியல் பிரிவில் 1,263 பேரும், முதுநிலை பிரிவில் 225 பேர், முனைவர் படிப்பில் 48 பேர் என மொத்தம் 1,536 மாணவ, மாணவிகளும், உறுப்பு மற்றும் இணைக்கல்லூரிகளில் இளம் அறிவியல் பிரிவில் 2,877 பேரும், முதுநிலை பிரிவில் 13 பேரும், முனைவர் படிப்பில் 6 பேர் என மொத்தம் 2,898 பேர் என இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 434 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
விழாவில் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், இணை வேந்தருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
- நேற்றிரவு சிவா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் வெள்ளியங்கிரி மலையேறினர்.
- உயிரிழந்த சிவா இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
வடவள்ளி:
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மலைகோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது.
இந்த மலையில் உள்ள சுயம்பு வடிவ லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டும் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை துருவம் பகுதியை சேர்ந்தவர் சிவா(வயது43). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
சிவா, தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக திருவண்ணாமலையில் இருந்து நேற்று கோவைக்கு வந்தார்.
நேற்றிரவு சிவா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் வெள்ளியங்கிரி மலையேறினர். 6 மலைகளை கடந்து 7-வது மலைக்கு சென்ற அவர்கள், அங்கு சாமி தரிசனம் செய்தனர்.
சாமி தரிசனம் முடித்த பின்னர் இன்று காலை அவர் மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்தனர். 3-வது மலையில் வந்தபோது, சிவாவுக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் அப்படியே மயங்கினார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவரது நண்பர்கள் உடனடியாக டோலி கட்டி அவரை கீழே தூக்கி வந்தனர். பின்னர் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் சிவாவை ஏற்றினர்.
அப்போது ஆம்புலன்ஸ் உதவியாளர் அவரை பரிசோதித்தபோது, சிவா உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சிவா இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர் ஆஞ்சியோ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த சிவா, பெங்களூருவில் பல ஆண்டுகளாக பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.
- மாணவரை தாக்கியவர்களில் 6 பேரை கைது செய்தனர்.
- மாணவர் பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.
கோவை:
கோவை அருகே தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவரும் படித்து வந்தார்.
இந்த நிலையில் கல்லூரி விடுதியில் அடிக்கடி பணம் திருடுபோனது. எம்.எஸ்.சி. படிக்கும் சென்னை மாணவர் தான் இதில் ஈடுபட்டதாக நினைத்த, முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேர் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சரமாரியாக தாக்கி சித்ரவதை செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, மாணவரை தாக்கிய 13 மாணவர்களையும் இடைநீக்கம் செய்தது. அத்துடன் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் க.க.சாவடி போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில் மாணவரை தாக்கியவர்களில் 6 பேரை கைது செய்தனர். இதில் 5 பேர் மைனர் என்பதால் அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், ஒருவர் கோவை மத்திய ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட எம்.எஸ்.சி மாணவரை அவரது பெற்றோர் சென்னைக்கு அழைத்து சென்றனர்.
மாணவர் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து அந்த மாணவருக்கு கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்துள்ளனர். கவுன்சிலிங் அளித்து அவரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.