என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளி வீரர்கள் 104 பேருக்கு வேலை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
    X

    கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளி வீரர்கள் 104 பேருக்கு வேலை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

    • விளையாட்டுத் துறையிலும் மாற்றுத்திறனாளிகள் சாதிக்க நம்முடைய அரசு தொடர்ந்து துணை நிற்கும்.
    • போட்டியில் பங்கேற்பதற்கு முன்பே பயிற்சிக் கட்டணம், பயண கட்டணம் ஆகியவை நம்முடைய அறக்கட்டளை மூலம் நிதி உதவிகளை அளித்து வருகின்றோம்.

    சென்னை:

    சட்டபேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் தொடர்பான கேள்விக்கு அளித்த பதில் விவரம் வருமாறு:-

    கடந்த ஆண்டு சட்டமன்றப் பேரவையில் நான் பேசும்போது, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில் மாற்றுத்திறனாளி வீரர்கள் உட்பட 100 விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.

    அதன்படி பொதுத்துறை நிறுவனங்களிலும், அரசுத்துறைகளிலும் 104 வீரர்களுக்கு சென்ற ஆண்டு மட்டும் வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.

    அதேபோல இந்த ஆண்டும் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மேலும் 100 விளையாட்டு வீரர்களுக்கு கண்டிப்பாக 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    மற்ற துறைகளைப் போலவே, விளையாட்டுத் துறையிலும் மாற்றுத்திறனாளிகள் சாதிக்க நம்முடைய அரசு தொடர்ந்து துணை நிற்கும். போட்டியில் பங்கேற்பதற்கு முன்பே பயிற்சிக் கட்டணம், பயண கட்டணம் ஆகியவை நம்முடைய அறக்கட்டளை மூலம் நிதி உதவிகளை அளித்து வருகின்றோம்.

    மற்ற வீரர்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கி வருகின்றோம். இதுவரை இந்த 104 நபர்களுக்கு கொடுத்திருக்கிறோம். அதில் 5 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசுத்துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×