என் மலர்tooltip icon

    சேலம்

    • 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக - திமுக இடையே மட்டும் தான் போட்டி என்று விஜய் தெரிவித்தார்.
    • நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.

    இன்று எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நேற்றைய தினம் பொதுமக்களுடைய பிரச்சினைகள் குறித்து பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பேச முயன்றபோது எனக்கு சட்ட பேரவை தலைவர் அனுமதி வழங்க வில்லை. குறிப்பாக உசிலம்பட்டி காவலர் அடித்து கொலை செய்த சம்பவம், மற்றொன்று சிவகங்கையில் பயிற்சி மருத்துவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக பேச முயன்றேன். அனுமதிக்கவில்லை.

    இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் அரசு தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கையில் என்னுடைய கருத்தை சட்டமன்றத்தில் தெரிவிக்க முற்பட்டேன். அதற்கு அனுமதி கொடுக்க வில்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு எங்களை வெளியேற்றி விட்டார்கள் என்றார்.

    தொடர்ந்து நிருபர்கள், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.விற்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தான் போட்டி என நடிகர் விஜய் பேசி உள்ளது குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அது அவருடைய கருத்து என்றும், ஒவ்வொரு கட்சித் தலைவரும் கட்சி வளர்ச்சிக்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்து வதற்காகவும் இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பார்கள். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க தான் என்பதை மக்களே ஏற்றுக்கொண்டு பிரதான எதிர்க்கட்சி என்கிற அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர் என்றார். பின்னர் செங்கோட்டையன் டெல்லி சென்றது குறித்து கேள்வி கேட்டதற்கு அது பற்றி எனக்கு தெரியாது என்று பதிலளித்தார்.

    • நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்த விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    • கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    சேலம்:

    தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகளில் இருந்து 5 ஆயிரம் டேங்கர் லாரிகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 6 மாநிலங்களில் உள்ள கியாஸ் சிலிண்டர்களில் நிரப்பும் பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    இதற்கிடையே நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்த விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ள்ளதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் காலை முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

    இதனால் எண்ணெய் நிறுவன கிடங்குகளில் இருந்து பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லப்படும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. இதனால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கோவையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்கிறது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    அதன் படி 3-வது நாளாக இன்றும் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பாட்டலிங் பிளாண்டுகளில் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    மேலும் போராட்டம் தொடர்ந்தால் விரைவில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கியாஸ் தட்டுபாடு ஏற்படும்.
    • பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லப்படும் பணிகள் பாதிப்பு.

    சேலம்:

    தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

    மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணை நிறுவனங்களின் கிடங்குகளில் இருந்து 5 ஆயிரம் டேங்கர் லாரிகள் மூலம் லோடு ஏற்றி ஒப்பந்த அடிப்படையில் 6 மாநிலங்களில் உள்ள கியாஸ் பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாசை எடுத்து வரும் பணியை சங்க உறுப்பினர்களின் லாரிகள் மேற்கொண்டு வருகின்றன.

    இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்த விதிகளில் 2 அச்சு லாரிகளை பயன்படுத்த கூடாது, 3 அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்று ஓட்டுனர் இல்லாத பட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம் வதிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

    இதனால் எண்ணை நிறுவன கிடங்குகளில் இருந்து பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் ஏற்றி செல்லப்படும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதனால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து நேற்று டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தி னருடன் எண்ைண நிறுவன அதிகாரிகள் கோவையில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் அறிவித்து ள்ளனர். அதன் படி 2-வது நாளாக இன்றும் கியாஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் .

    இது குறித்து தென் மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறிய தாவது-

    ஆயில் நிறுவன அதிகாரிகளுடனான பேச்சு வார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படாததால் தென் மண்டலத்தில் கியாஸ் டேங்கர் லாரிகள் போராட்டத்தில் ஈடுப ட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள கியாஸ் டேங்கர் லாரிகளும் இந்த போராட்டத்தில் ஈடு பட முன் வந்துள்ளன. ஆனாலும் இன்னும் ஒரு வாரங்களுக்கு கியாஸ் தட்டப்பாடு வராது. அதன் பின்னர் கியாஸ் தட்டுபாடு ஏற்படும்.

    தென் மண்டலத்தில் 5 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடினாலும், 3 ஷிப்டுகளாக அந்த லாரிகள் பிரிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1500-க்கும் மேற்பட்ட லாரிகளில் கியாஸ் நிரப்பி பாட்டலிங் பிளாண்டுகளுக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.

    அந்த பணிகள் முற்றிலும் தற்போது முடங்கி உள்ளதால் நாள் ஒன்றுக்கு 18 லட்சம் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணி பாதிக்க ப்பட்டுள்ள நிலையில் 2 நாட்களில் மட்டும் 36 லட்சம் கியாஸ் சிலிண்டர்க ளில் கியாஸ் நிரப்பும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஒரு டேங்கர் லாரியில் 18 ஆயிரம் கிலோ கியாஸ் நிரப்பப்பட்டு கொண்டு செல்லப்படும். அதன் மூலம் 1200 சிலிண்டர்கள் நிரப்பபடும். கடந்த 2 நாட்களில் 3 ஆயிரம் டேங்கர் லாரிகள் இயங்காததால் 36 லட்சம் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணி தடை ஏற்பட்டுள்ளது.

    இந்த வேலை நிறுத்தத்தால் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 200 கோடி ரூபாய் வீதம் 2 நாட்களில் 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோரிடம் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் முறையிட உள்ளோம்.

    மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக இது வரை எந்த தகவலும் இல்லை.

    கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார். 

    • தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வேன், டிராக்டர் மீது மோதியது.
    • விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 44). இவரது நண்பர் மேட்டூர் தாலுகா தெற்கத்தியூரை சேர்ந்த நரசிம்மன் (43). டிராக்டர் டிரைவர்களான இவர்கள் இருவரும் டிராக்டர் வண்டியில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோவையை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சங்ககிரி அடுத்த கலியனூர் பிரிவு என்ற இடத்தில் பின்னால் வந்த தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வேன், டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டரில் பயணம் செய்த மாதேஷ் அவரது நண்பர் நரசிம்மன் ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.


    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சரக்கு வேன் டிரைவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தீபக் ( 23) என்பவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் விரைந்து சென்று பலியான மாதேஷ், நரசிம்மன் உடல்களை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்து மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் முழுவதும் சோகமாக காட்சி அளித்தது.

    விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்பு எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தி விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கோர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • பாஜக உடன் கூட்டணி கிடையாது, ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது எனக் கூறியவர்கள் மணிக்கணக்கில் பேசியுள்ளனர்.
    • என்ன பேசியிருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிடுவதற்காகத்தான் வந்துள்ளேன். யாரையும் சந்திக்கவில்லை என டெல்லி இருந்தபோது தெரிவித்தார்.

    ஆனால் நேற்று மாலை அமித் ஷாவை சந்தித்தார். சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில் அமித் ஷா- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிமுக கட்டிடத்தை பார்வையிட செல்வதாக கூறினார்கள். ஆனால் அமித் ஷாவை சந்தித்தார்கள். ஏன் இவ்வளவு ஒளிவு மறைவாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?.

    பகிரங்கமாக சந்திக்கலாமே... ஒளிந்து மறைந்து சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையே... நேற்று கட்டிடத்தை திறந்து வைக்க வந்துள்ளேன் என்றார். இன்று தேர்தலை பற்றி பேசவில்லை. தமிழ்நாடு பிரச்சினை பற்றி பேசினோம் எனச் சொல்கிறார். நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. கல்யாண தேதி எந்ததேதி என்று தீர்மானித்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை... அவ்வளவுதான்...

    பாஜக உடன் கூட்டணி கிடையாது, ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது எனக் கூறியவர்கள் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். என்ன பேசியிருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாடு பிரச்சினை என்றால் சந்திக்க அனுமதி வழங்கியிருக்கமாட்டார்கள். அப்படி வழங்கினாலும் கோரிக்கை மனுவை பெற்று 3 நிமிடத்தில் அனுப்பியிருப்பாரக்ள்.

    அரசியல் உறவே கிடையாது என சத்தியம் பேசிய எடப்பாடி பழனிசாமி, எந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் சந்தித்து பேசினார் எனத் தெரியவில்லை. என்ன நெருக்கடி என்று தெரியவில்லை. ஏதோ ஒரு நெருக்கடிக்கு உள்ளாகி அமித் ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். மெல்ல மெல்ல மற்ற செய்திகள் வெளிவரும்.

    இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.

    • அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.
    • தற்போது தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் தற்போது தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துஉள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.22 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 1073 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 1235 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
    • நாங்களும் அவரை அணுகவில்லை.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.முக. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "திருப்பி திருப்பி நாங்கள் கூறிவிட்டோம். அ.தி.மு.க. மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீங்களாகவே கற்பனையில் கூறுகிறீர்கள். நீங்கள் சொல்லும் அவர்களை, கட்சியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இல்லை. பா.ம.க.-வுக்கு, ராஜ்யசபா சீட் கேட்கப்படுகிறதா என கேட்கிறீர்கள். இன்னும் ராஜ்ய சபா தேர்தல் பற்றி அறிவிக்கப்படவில்லை.

    நீங்களே கற்பனையாக கேள்வி கேட்கிறீர்கள். ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வரும்போது நாங்கள் தெரிவிப்போம். த.வா.க. வேல்முருகன் எங்களை அணுகவில்லை. நாங்களும் அவரை அணுகவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான், கூட்டணி பற்றி பேசுவோம்.

    கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பது. வாக்குகள் சிதறாமல் அதிக வாக்குகளை பெற வியூகம் அமைப்பது வழக்கம் தான். கூட்டணி என்றும் நிலையானது இல்லை.

    முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை. அதனால், ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப் போடுகிறார்," என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    • வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
    • நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள குப்தா நகர் பகுதியில் வசித்து வருபவர் மீனா (55), இவர் 15-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்றிரவு அதில் ஒரு பசு மாட்டை நாய்கள் கடித்து குதறிய நிலையில் அதில் ஒரு பசு மாடு கழுத்து மற்றும் பின் பகுதியில் ரத்த காயங்களுடன் வீட்டருகே இன்று காலை இறந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த மீனா கதறி அழுதனர்.

    தொடர்ந்து கால் நடைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே சேலம் மாநகரில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொது மக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பசு மாடு இறந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    இது குறித்து பசுமாட்டின் உரிமையாளர் மீனா கூறுகையில், மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு சொந்தமான மாடுகளை ஏற்கனவே நாய்கள் கடித்த நிலையில் அதனை விரட்டி விட்டுள்ளேன். நேற்றிரவு நாய்கள் கடித்தது எனக்கு தெரியாமல் போய் விட்டது. மாடு இறந்ததை இன்று காலையில் தான் பார்த்தேன் . இதனால் பரிதவித்து வருகிறேன்.

    இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. எனவே நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வெறி நாய் கடித்த பசு மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். நாய் கடித்து பசு மாடு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இரு மாதங்களாக வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • ராட்தச பாறையில் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் வசிஷ்டநதி கரையில் பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் ஒன்றான, 500 ஆண்டுக்கு மேல் பழமையானதாக கருதப்படும் சாம்பவமூர்த்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கடந்த இரு மாதங்களாக வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்த நிலையில், கோவில் அருகே ஆற்றின் மையப்பகுதியில் ராட்தச பாறையில் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவர் காசி.அன்பழகன் தலைமையிலான குழுவினர், ஏறக்குறைய 11 நீளத்தில் 4 அடி உயரம் மற்றும் அகலத்தில் காணப்படும் இந்த புடைப்புச் சிற்ப பாறையை ராட்சத கிரேன் கொண்டு மீட்டு கரைக்கு கொண்டு சுத்தப்படுத்தினர்.

    அப்போது இந்த பாறையில், 16ம் நுாற்றாண்டு காலத்தை சேர்ந்த ஆஞ்சநேயர், விநாயகர் மற்றும் சிவலிங்கம் சாமிக ளின் புடைப்புச் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து இந்த புடைப்புச் சிற்ப பாறையை கோவிலுக்கு அருகே வசிஷ்டநதிக் கரையிலேயே வைத்துள்ளனர். இந்த சாமிகளை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். 

    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    அதே நேரம் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் மெதுவாக குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று வினாடிக்கு 263 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 425 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 108.71 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • கொலை செய்யப்பட்ட லோகநாதனும், சத்தியவாணியும் கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
    • எப்படியாவது லோகநாதனை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் சதி திட்டம் தீட்டினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கபனாவரா-நெலமங்கலா ரெயில் நிலையங்களுக்கு இடையே கடந்த மாதம் 19-ந்தேதி வயிற்றில் இரண்டாக வெட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த வாலிபரின் தலை, கழுத்து மற்றும் கைகளில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் அந்த பகுதியில் இருந்த ரெயில்வே பாலத்தில் ரத்த கறைகளும் காணப்பட்டது. இதையடுத்து போலீசார் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர் குறித்து துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் கொலை செய்யப்பட்ட வாலிபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்கத்து மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள போலீஸ் நிலையங்களில் யாராவது மாயமானதாக புகார் வந்துள்ளதா என்று விசாரணை நடத்தினர்.

    அப்போது சூளகிரியைச் சேர்ந்த லோகநாதன் (24) என்ற வாலிபர் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் லோகநாதன் போட்டோவை பெற்று தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபரின் முகத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது இரண்டும் ஒன்றாக இருந்தது. எனவே கொலை செய்யப்பட்டது சூளகிரியை சேர்ந்த லோகநாதன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து லோகநாதன் உடலை அடையாளம் காட்டினர். அதன் அடிப்படையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதற்கிடையே தனிப்படை போலீசார் கொலை நடந்த இடம் மற்றும் ஓசூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை செய்யப்பட்ட லோகநாதன் ஒரு பெண்ணுடன் பஸ்சில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண் யார் என்று தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது அவர் ஓசூரைச் சேர்ந்த சத்தியவாணி (27) என்பதும், இவர் பூ வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசாரிடம் சத்தியவாணி சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அந்த விவரம் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட லோகநாதனும், சத்தியவாணியும் கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து சத்தியவாணி லோகநாதனுக்கு தெரியாமல் ஓசூரைச் சேர்ந்த வரதராஜ் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து லோகநாதனுடனும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் சத்தியவாணியில் நடத்தையில் லோகநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அவர் சத்தியவாணியை கண்காணித்தபோது அவர் வரதராஜ் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன் சத்தியவாணியை தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார். அவருடன் செல்ல விரும்பாத சத்தியவாணி வரதராஜிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து எப்படியாவது லோகநாதனை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் சதி திட்டம் தீட்டினர்.

    அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி சத்தியவாணி-வரதராஜ் ஆகியோர் சூளகிரிக்கு வந்து லோகநாதனை சந்தித்தனர். பின்னர் அவரை ஏமாற்றி பெங்களூருவில் உள்ள ஆளுர் என்ற பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் லோகநாதனை அரிவாளால் வெட்டி கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சத்தியவாணி, அவரது கணவர் வரதராஜ், ஓசூர் தசனாபூரை சேர்ந்த சீனிவாஸ் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    • சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது.
    • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது.

    சேலம்:

    சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை நெருங்கியதால் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்தநிலையில் சேலம் மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென சேலம் மாநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை சாரல் மழையாக நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

    சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின் கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    இதேபோல சேலம் புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி , கரியகோவில், வீரகனூர், நத்தக்கரை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.

    கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    தலைவாசல் பகுதியில் நேற்று மதியம் மழை பெய்த நிலையில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது. மதியத்திற்கு மேல் மழை பெய்ததால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்குள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்த்தமுடன் குதூகலம் அடைந்தனர்.

    5 அடி தூரத்தில் இருப்பவர்கள் கூட தெரியாததால் ஏற்காடு மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து சென்றனர். மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக நத்தக்கரையில் 67 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9.8, ஏற்காடு 14.4, வாழப்பாடி 20, ஆனைமடுவு 22, ஆத்தூர் 36, கெங்கவல்லி 26, தம்மம்பட்டி 33, ஏத்தாப்பூர் 8, கரியகோவில் 47, வீரகனூர் 43, சங்ககிரி 13, எடப்பாடி 2, மேட்டூர் 5.4, ஓமலூர் 5.5, டேனீஸ்பேட்டை 10.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 362.7 மி.மீ. மழை கொட்டியது.

    நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரம், வெண்ணந்தூர், நாமகிரி பேட்டை, குமாரபாளையம், மங்களபுரம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் திருச்செங்கோடு, கொல்லி மலை, பரமத்திவேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 30 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் மற்றும் மங்களபுரத்தில் 22.6, மோகனூர் 2, நாமக்கல் 15, பரமத்திவேலூர் 4, புதுச்சத்திரம் 22, ராசிபுரம் 21.8, சேந்தமங்கலம் 18, கலெக்டர் அலுவலகம் 12.5, என மாவட்டம் முழுவதும் 191.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    ×