என் மலர்
தமிழ்நாடு

கள்ளக்காதலனை கொன்று தண்டவாளத்தில் வீசிய பெண் கணவருடன் கைது

- கொலை செய்யப்பட்ட லோகநாதனும், சத்தியவாணியும் கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
- எப்படியாவது லோகநாதனை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் சதி திட்டம் தீட்டினர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கபனாவரா-நெலமங்கலா ரெயில் நிலையங்களுக்கு இடையே கடந்த மாதம் 19-ந்தேதி வயிற்றில் இரண்டாக வெட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த வாலிபரின் தலை, கழுத்து மற்றும் கைகளில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் அந்த பகுதியில் இருந்த ரெயில்வே பாலத்தில் ரத்த கறைகளும் காணப்பட்டது. இதையடுத்து போலீசார் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர் குறித்து துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் கொலை செய்யப்பட்ட வாலிபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்கத்து மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள போலீஸ் நிலையங்களில் யாராவது மாயமானதாக புகார் வந்துள்ளதா என்று விசாரணை நடத்தினர்.
அப்போது சூளகிரியைச் சேர்ந்த லோகநாதன் (24) என்ற வாலிபர் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் லோகநாதன் போட்டோவை பெற்று தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபரின் முகத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது இரண்டும் ஒன்றாக இருந்தது. எனவே கொலை செய்யப்பட்டது சூளகிரியை சேர்ந்த லோகநாதன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து லோகநாதன் உடலை அடையாளம் காட்டினர். அதன் அடிப்படையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதற்கிடையே தனிப்படை போலீசார் கொலை நடந்த இடம் மற்றும் ஓசூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை செய்யப்பட்ட லோகநாதன் ஒரு பெண்ணுடன் பஸ்சில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண் யார் என்று தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது அவர் ஓசூரைச் சேர்ந்த சத்தியவாணி (27) என்பதும், இவர் பூ வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசாரிடம் சத்தியவாணி சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அந்த விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட லோகநாதனும், சத்தியவாணியும் கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து சத்தியவாணி லோகநாதனுக்கு தெரியாமல் ஓசூரைச் சேர்ந்த வரதராஜ் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து லோகநாதனுடனும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் சத்தியவாணியில் நடத்தையில் லோகநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அவர் சத்தியவாணியை கண்காணித்தபோது அவர் வரதராஜ் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன் சத்தியவாணியை தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார். அவருடன் செல்ல விரும்பாத சத்தியவாணி வரதராஜிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து எப்படியாவது லோகநாதனை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் சதி திட்டம் தீட்டினர்.
அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி சத்தியவாணி-வரதராஜ் ஆகியோர் சூளகிரிக்கு வந்து லோகநாதனை சந்தித்தனர். பின்னர் அவரை ஏமாற்றி பெங்களூருவில் உள்ள ஆளுர் என்ற பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் லோகநாதனை அரிவாளால் வெட்டி கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சத்தியவாணி, அவரது கணவர் வரதராஜ், ஓசூர் தசனாபூரை சேர்ந்த சீனிவாஸ் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.