தமிழ்நாடு

கொடைக்கானலில் பகலிலும் தொடரும் பனி மூட்டத்தால் மக்கள் பாதிப்பு- வாகன ஓட்டிகள் கடும் அவதி

Published On 2023-02-03 05:10 GMT   |   Update On 2023-02-03 05:10 GMT
  • மலைப்பகுதிகளில் மட்டுமின்றி நகர்ப்பகுதிகளிலும் பனி மூட்டம் மற்றும் மேக மூட்டம் நிலவுகிறது.
  • கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் விடுதிகளிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொடைக்கானல்:

தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வரும் நிலையில் கொடைக்கானலில் கடும் பனி மூட்டத்துடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மலைப்பகுதிகளில் மட்டுமின்றி நகர்ப்பகுதிகளிலும் பனி மூட்டம் மற்றும் மேக மூட்டம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இரவு, பகல் என 24 மணி நேரமும் கொடைக்கானலில் தற்போது ஒரே சீதோசனம் நிலவி வருகிறது. தெருக்கள் மற்றும் சாலைகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எதிரில் வருபவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்கவும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்யும் மழை காலையிலும் தொடர்வதால் பள்ளி மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்கள் பின்னர் ஏமாற்றத்துடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.

கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் விடுதிகளிலேய முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் இதுபோன்ற ஒரு சீதோசனம் கொடைக்கானலில் காணப்படுவது அபூர்வமான நிகழ்வாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகளும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News