தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை விரைவாக நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2023-10-19 14:09 IST   |   Update On 2023-10-19 14:09:00 IST
  • கர்நாடகம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் ஆந்திர அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
  • தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆந்திராவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் நவம்பர் 15-ந் தேதி முதல் தொடங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள சாதிகளை அடையாளம் கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கான சமூக நீதித்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் ஆந்திர அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

சமூகநீதி மண் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால், சமூக, பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு பின்தங்கி விடும். எனவே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News