தமிழ்நாடு

சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயம்

Published On 2023-01-08 05:26 GMT   |   Update On 2023-01-08 05:28 GMT
  • மாரத்தான் ஓட்டத்தையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
  • ஆண்கள், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம் 4 வகையாக நடத்தப்பட்டது.

சென்னை:

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னை மாரத்தான் ஓட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான 11-வது மாரத்தான் பந்தயம் இன்று நடந்தது. நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டும் நோக்கிலும் இந்த பந்தயம் நடத்தப்பட்டது.

ஆண்கள், பெண்களுக்கான இந்த மாரத்தான் ஓட்டம் 4 வகையாக நடத்தப்பட்டது. முதலில் முழு மாரத்தான் போட்டி நடந்தது. இந்த பந்தயம் 42.195 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. 32.186 கிலோ மீட்டர் (16 வயதுக்குட்பட்டோர்) தூரத்துக்கு ஓட்டம் நடந்தது. மினி மாரத்தான் (21.097 கிலோ மீட்டர்) 10 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளில் பந்தயம் நடந்தது.

4 பிரிவுகளில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முழு மாரத்தான் பந்தயம் நேப்பியர் பாலத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. சாந்தோம், அடையாறு, மத்திய கைலாஷ், டைட்டல் பார்க், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், அக்கரை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருகே முடிவடைந்தது.

21 கிலோ மீட்டர் தூரத்துக்கான மினி மாரத்தான் ஓட்டம் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பந்தயம் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருகே நிறைவடைந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திர பாபு இதில் பங்கேற்றனர். 10 கிலோ மீட்டர் தூர பந்தயம் காலை 6 மணிக்கு நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கியது. சாந்தோம், அடையாறு வழியாக தரமணி சென்றடைந்தது.

மாரத்தான் ஓட்டத்தையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News