கோவையில் இருந்து ஊட்டிக்கு 25 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்
- வருகிற 7-ந்தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை நீலகிரிக்கு வருவோர் இ-பாஸ் பெற்றே செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கோவை:
சமவெளி பகுதிகளில் சுட்டெரித்து வரும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளு,குளு மலை பிரதேசங்களான ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடை விழா வருகிற 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. 10-ந் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது.
மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த மற்றும் வாடகை வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களிலும் பயணித்து ஊட்டிக்கு வருகின்றனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கோவைக்கு வந்தே ஊட்டிக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் வருகிற 7-ந்தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை நீலகிரிக்கு வருவோர் இ-பாஸ் பெற்றே செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊட்டிக்கு வரும் பலர் தங்களது சொந்த வாகனங்களை தவிர்த்து அரசு பஸ்களில் பயணிக்க வாய்ப்புள்ளது. பஸ்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, கோடை சீசனையொட்டி கோவையில் இருந்து நாளை முதல் 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
கோவையில் இருந்து ஊட்டி மற்றும் கூடலூர் வரை அரசு பஸ்களின் புறப்பாடு 80 ஆக உள்ளது.
தற்போது ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நாளை முதல் கோவையில் இருந்து கூடுதலாக 25 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம்.
எனவே சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து, அரசு பஸ்களில் பயணித்து கோடைவிழாவை காண நீலகிரிக்கு செல்லலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.