தமிழ்நாடு

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு இன்று ஒரு நாள் தடை

Published On 2022-10-18 06:12 GMT   |   Update On 2022-10-18 06:12 GMT
  • சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
  • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

சென்னை:

சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து சபாநாயகரிடம் மனு அளித்தும் அது ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சட்டசபையில் இருந்து அவர்கள் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்பில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையின் மாண்பை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதால் இன்றும், நாளையும் அவர்கள் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு 2 நாள் தடை என்பது அதிகபட்சம் என்று கருதுகிறேன்.

சபாநாயகர் முடிவில் நான் தலையிட முடியாது என்றாலும் அவர்களுக்கான 2 நாள் தடையை இன்று ஒருநாள் மட்டும் குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை சபாநாயகர் அப்பாவு ஏற்றார்.

இதையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு இன்று ஒருநாள் தடைவிதிப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனை துரைமுருகன் வாசித்தார்.

Tags:    

Similar News