தமிழ்நாடு

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு: அண்ணா நினைவிடம் முன்பு விவசாயிகள் போராட்டம்- அய்யாக்கண்ணு உள்பட 90 பேர் கைது

Published On 2023-07-09 09:13 GMT   |   Update On 2023-07-09 09:13 GMT
  • மேகதாது அணை கட்ட முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா நினைவிட நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு உள்பட விவசாயிகள் 90 பேரை கைது செய்தனர்.

சென்னை:

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று மதியம் எழும்பூர் வந்தனர்.

பின்னர் அவர்கள் எழும்பூரில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு சென்றனர், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்காக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ரெயில் மூலமாக செல்ல முயன்றனர். இதனையறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் அய்யாகண்ணு தலைமையில், விவசாயிகள் 90 பேர், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு சென்றனர். கர்நாடகா மேகதாது அணை கட்ட முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா நினைவிட நுழைவு வாயில் முன்பு அமர்ந்து இன்று காலை 7.30 மணி யளவில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு உள்பட விவசாயிகள் 90 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

Similar News