சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தால் அ.தி.மு.கவுக்கு எந்த லாபமும் இல்லை- திண்டுக்கல் சீனிவாசன்
- தி.மு.க ஆட்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வாக்காளர் முகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது,
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசி உயர்வை வைத்தே மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர். ஆவின்பால் விலையை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்திவிட்டனர். மின்சார கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி போன்ற அனைத்தையும் உயர்த்திவிட்டனர்.
தி.மு.கவுக்கு வாக்களித்த மக்களும், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது என்று தி.மு.கவினர் கூறிவருகின்றனர். மழைநீரே இல்லை என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சென்னை மழைநீரில் தத்தளிக்கிறது. ஆனால் அ.தி.மு.க. 4ஆக உடைந்துவிட்டது. இவர்கள் ஒன்றுசேர்ந்தால்தான் வெற்றிபெற முடியும் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.கவின் 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் 70 பேர் உள்ளனர். 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர் உள்ளனர். தி.மு.க ஆட்சியின் அவலத்தை மக்கள் தற்போது நன்றாக உணர்ந்து உள்ளனர். எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவது உறுதி. இதற்காக அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று அவர் தெரித்தார். இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அபார வெற்றிபெறும். இந்த கூட்டணியில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோருக்கு இடமில்லை. அவர்கள் வருவதால் அ.தி.மு.கவுக்கு எந்த லாபமும் இல்லை. தி.மு.க ஆட்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களை கைது செய்யும் போலீசாரை ஆளும்கட்சியினர் மிரட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான சிறப்பு முகாம்களில் கட்சி நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, அபிராமி கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.