கோடையில் நடக்கும் கொள்ளைகளை தடுக்க போலீசார் புதிய ஏற்பாடு
- பாதுகாப்பில்லாத இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகள் பற்றி போலீசார் விசாரித்து போன் நம்பர் வாங்கி எப்போது திரும்பி வருவீர்கள் என்று விசாரிக்கிறார்கள்.
- பொதுமக்கள் ஜாலியாக சொந்த ஊர்களில் இருக்கும் நிலையில் அவர்களது வீடுகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை:
கோடை விடுமுறையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விடுவார்கள்.
சிலர் கோடை விடுமுறை முழுவதையும் சொந்த ஊரில் கழிப்பார்கள். சிலர் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவார்கள்.
இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் பூட்டி கிடக்கின்றன. அவ்வாறு பூட்டி கிடக்கும் வீடுகளை பகல் நேரங்களில் வியாபாரிகள் போல் சென்று நோட்டம் போட்டு இரவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து செல்வதுண்டு. கடந்த ஆண்டு அந்த மாதிரியான சம்பவங்கள் சில இடங்களில் நடந்தன.
இந்த ஆண்டும் அதே போல் நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்கள். சென்னை, தாம்பரம் மாநகர பகுதியிலும், ஆவடி பகுதியிலும் பூட்டி கிடக்கும் வீடுகளை தினமும் கண்காணிக்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் காவல் துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
தினமும் பகல், மாலை, நள்ளிரவு ஆகிய 3 நேரமும் பூட்டிய வீடுகளை போலீசார் கண்காணிப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் பூட்டி கிடக்கும் வீடுகள் பற்றி குடியிருப்போர் நலச்சங்கங்களிடம் தகவல் கேட்டு அவற்றையும் கண்காணிப்பார்கள்.
வீடுகளை பூட்டி செல்வது பற்றி அருகில் இருக்கும் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் பலர் அதை கடைபிடிப்பதில்லை.
பாதுகாப்பில்லாத இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகள் பற்றி போலீசார் விசாரித்து போன் நம்பர் வாங்கி எப்போது திரும்பி வருவீர்கள் என்றும் விசாரிக்கிறார்கள்.
பொதுமக்கள் ஜாலியாக சொந்த ஊர்களில் இருக்கும் நிலையில் அவர்களது வீடுகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.