பீர் பாட்டிலை வீசி மாணவர்கள் மோதல்- கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க ரெயில்வே போலீசார் கடிதம்
- அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர்.
அம்பத்தூர்:
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருகிறது.
அவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. ரூட்டு தல பிரச்சினையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கைது செய்தும், எச்சரித்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் மாணவர்களிடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று காலையும் மின்சார ரெயிலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. காலை நேரம் என்பதால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரியில் படிக்கும் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயணம் செய்தனர்.
பட்டரைவாக்கம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஒரு பெட்டியில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் இடையே திடீரெ மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதனை கண்டு ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்குள் பட்டரைவாக்கம் ரெயில் நிலையத்தை அடைந்ததும் மின்சார ரெயில் நின்றது. உடனே ரெயிலில் இருந்து இறங்கிய பச்சயைப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர்.
மேலும் கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர். உருட்டுகட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இதில் சில மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மாணவர்களின் மோதலை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து வேறு ரெயில் பெட்டியில் ஏறினர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே மாணவர்கள் மோதல் பற்றி அறிந்ததும் பெரம்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். உடனே மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 3 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்தநிலையில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரிக்கு ரெயில்வே போலீசார் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே டி.எஸ்.பி. ரமேஷ் கூறும் போது, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையும் பட்டரைவாக்கத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பயணிகளுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் வகையில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாணவர்களை நிரந்தரமாக கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரிக்கு கடிதம் வழங்கி உள்ளோம். மேலும் பஸ், ரெயிலில் பயணம் செய்யும் மாணவர்களின் விபரத்தையும் கேட்டு உள்ளோம் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இதேபோல் கல்லூரி மாணவர்கள் கல், பாட்டில்களை வீசி மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.