சென்னையில் இன்று மாலை போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை
- இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? அல்லது ஸ்டிரைக் அறிவிக்கப்படுமா? என்பது இன்று மாலை தெரியவரும்.
சென்னை:
போக்குவரத்து கழகங்களில் அவுட்சோர் சிங் மூலம் (காண்டிராக்ட்) டிரைவர், கண்டக்டர்களை வேலைக்கு பணியமர்த்துவதை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
மாநகர போக்குவரத்து கழகத்தில் ரூ.22 ஆயிரம் சம்பளத்துக்கும், விரைவு போக்குவரத்து கழகத்தில் தினசரி 813 ரூபாய்க்கு பதில் 553 ரூபாய் சம்பளத்தில் பணியாற்ற டிரைவர்களை வேலைக்கு எடுப்பதை எதிர்த்தும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் ஏப்ரல் 18 அன்று ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
இதன் மீது தற்போது 2 கட்ட பேச்சுவார்த்தையை நடத்திவிட்டது. இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் துறை இணை கமிஷனர், போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் அனந்தராஜன், மாநகர போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் தயானந்தம், தலைவர் துரை, பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, சம்மேளன இணைச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? அல்லது ஸ்டிரைக் அறிவிக்கப்படுமா? என்பது இன்று மாலை தெரியவரும்.