தமிழ்நாடு

தொழிலாளியின் ஷோரூமை பார்க்க சிங்கப்பூரில் இருந்து வேதாரண்யம் வந்த உரிமையாளர்

Published On 2024-03-05 05:24 GMT   |   Update On 2024-03-05 05:24 GMT
  • சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆயக்காரன்புலத்தில் சொந்தமாக மர பர்னிச்சர் ஷோரூம் திறந்தார்.
  • சிங்கப்பூர் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரும் வந்தனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த சண்முகராஜன் 14 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று அங்கு ஒரு மர பர்னிச்சர் கம்பெனியில் பணிபுரிந்தார்.

அங்கு 14 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி அந்த கம்பெனிக்கு நல்ல வருவாயை ஈட்டி கொடுத்து, அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.

இதனால் இனி சொந்த ஊரில் தொழில் தொடங்க முடிவு செய்தார். இதற்காக சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆயக்காரன்புலத்தில் சொந்தமாக மர பர்னிச்சர் ஷோரூம் திறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சிங்கப்பூர் பர்னிச்சர் நிறுவன உரிமையாளர் கோலிஞ்சி உடனே சண்முகராஜனை தொடர்பு கொண்டு நீங்கள் தொடங்கி உள்ள பர்னிச்சர் ஷோரூமை பார்க்க இந்தியாவுக்கு வருவதாக கூறினார்.

இதையடுத்து அவர் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அவருடன் சிங்கப்பூர் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரும் வந்தனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் கார் மூலம் ஆயக்காரன்புலம் வந்தனர். அவர்களை வித்தியாசமான முறையில் அழைத்து செல்ல சண்முகராஜன் முடிவு செய்தார்.

அதன்படி சிங்கப்பூர் நிறுவன உரிமையாளர் கோலிஞ்சி, ஊர்வலமாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரை குதிரை சாரட்டு வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக சுமார் மூன்று கிலோமிட்டர் தூரம் மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் பர்னிச்சர் ஷோரூமுக்கு அழைத்து சென்றார். அங்கு அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான் தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து, பூரண கும்ப மரியாதை அளித்து பூக்கள் தூவி வரவேற்றனர்.

பின்னர் சண்முகராஜன் தொடங்கியுள்ள மர பர்னிச்சர் ஷோரூமை பார்வையிட்டு அவரை கட்டி தழுவி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது கோலிஞ்சி கூறும்போது, என்னிடம் வேலை சண்முகராஜன் மர பர்னிச்சர் ஷோரூமை சிறப்பாக நடத்தி தொழிலதிபராக மாறி இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

சிங்கப்பூரிலிருந்து உரிமையாளர், தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளியின் ஷோரூமை பார்க்க வந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News