என் மலர்
நாகப்பட்டினம்
- பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
- ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறினர்.
நாகப்பட்டினம்:
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ரம்ஜான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிறை தென்பட்டதை யொட்டி, இன்று (திங்கட்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள தர்காக்கள், பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் சில்லடி கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
தொழுகைக்கு பின், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறினர். தொழுகையில் பங்கேற்ற சிறுவர்களும் கைக்குழுக்கி வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பும் வழங்கப்பட்டது.
இதேபோல், நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
- கடந்த 5-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது.
- பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.
இந்த பேராலயத்தில் கடந்த 5-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது. தவகாலத்தை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி 3-வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.
பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கலந்து கொண்டனர்.
- ஒருவரை படகுடன் காணவில்லை, மற்றொருவர் நிலை தடுமாறி விழுந்தார்.
- கப்பல் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை அக்கரைப் பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 57). இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார்.
நேற்று கண்ணதாசன் கரை திரும்பி இருக்க வேண்டும், ஆனால், அவர் கரை திரும்பவில்லை. பைபர் படகுடன் மாயமாகி விட்டார். இதையடுத்து அக்கரைப்பேட்டையில் இருந்து 5 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மாயமான கண்ணதாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்க வில்லை.
பின்னர், இதுகுறித்து மீன்வளத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மீன்வளத்துறையினர் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அவர்கள் கடலில் மாயமான கண்ணதாசனை கடற்படை கப்பல் மூலம் தேடி வருகின்றனர்.
இதேபோல், நாகையை அடுத்துள்ள நாகூர் சம்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (52). இவர் கடந்த 14-ந்தேதி நாகை மீன்பிடி துறை முகத்தில் இருந்து விசைப்படகில் 11 மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.
அப்போது ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மாணிக்கம் நிலை தடுமாறி கடலில் விழுந்துவிட்டார். இதனை கண்ட விசைப்படகில் இருந்த சக மீனவர்கள் மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து, மீன்வளத்துறை தெரிவித்த தகவலின் பேரில் இந்திய கடற்படையினர் கடலில் தவறி விழுந்த மாணிக்கத்தை கப்பல் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் அடுத்தடுத்து மாயமான சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ்நாட்டில் வளர்ச்சி, தமிழ் மொழியின் சிறப்பு சிலரது கண்களை உறுத்துகிறது.
- தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது.
நாகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகம் இருமொழிக்கொள்கையை பின்பற்றுவதால் எல்லா புள்ளி விவரங்களிலும் முன்னிலையில் உள்ளது.
* தமிழ்நாட்டில் வளர்ச்சி, தமிழ் மொழியின் சிறப்பு சிலரது கண்களை உறுத்துகிறது.
* ஆங்கிலம் கற்றதால் தான் பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் உள்ளனர். இந்தியை கற்பதால் என்ன பயன்?
* தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது.
* சுயநலத்திற்காக தமிழகத்தின் எதிர்காலத்தை அடகு வைக்காமல் அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள்.
* அரசியல் வேறுபாடுகளை களைந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள் என்று மீண்டும் அவர் அழைப்பு விடுத்தார்.
- தற்போதெல்லாம் கைது செய்யும் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை அபராதமும் விதிக்கிறது.
- தமிழக மீனவர்களின் நலனை நிலைநாட்டும் வகையில் உறுதியான நடவடிக்கை தேவை.
நாகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* 10 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 3,000-க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* தற்போதெல்லாம் கைது செய்யும் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை அபராதமும் விதிக்கிறது.
* மீனவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக தொடர முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
* சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தமிழக மீனவர்களின் நலனை நிலைநாட்டும் வகையில் உறுதியான நடவடிக்கை தேவை.
* மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
* மீனவர் பிரச்சனையை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
* ஒவ்வொரு பிரச்சனைகளிலும் தமிழக அரசு போராடிக்கொண்டு தான் இருக்கிறது என்று கூறினார்.
- நாகப்பட்டினம் நகராட்சி கட்டிடம் ரூ. 4 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
- இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நாகப்பட்டினம்:
நாகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
13 பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் ஏராளமானார் பலன் அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்திற்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
வேதாரண்யம் தலைஞாயிறு பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை 420 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். விழுந்தமாவடி, வானமா மாகாதேவி பகுதிகளில் ரூ. 12 கோடி மதிப்பில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும். 3 பல்நோக்கு பஸ் நிலையம் அமைக்கப்படும்.
நாகப்பட்டினம் நகராட்சி கட்டிடம் ரூ. 4 கோடி செலவில் புனரமைக்கப்படும். நாகையில் 3 தளங்கள் கொண்ட பேரிடர் மையங்கள் அமைக்கப்படும். ரூ. 65 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் சென்னையில் அமைக்கப்படும்.
இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு பார்க்க வேண்டும். தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை பேரிடர் நிதியை கூட மத்திய அரசு தருவதில்லை. பள்ளிக்கல்வி க்கான நிதியையும் தருவதில்லை. மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தருவோம் என்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சி, தனித்துவம் பிடிக்காததால் இப்படி செய்கிறார்கள்.
இந்தி திணிப்பை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். குழந்தைகள் கூட தங்களது சேமிப்பை கல்வி நிதிக்கு தருகிறார்கள். அவர்களது இந்த செயலை காணும் போது கண் கலங்குகிறது.
தமிழ்நாடு முன்னேறியதற்கு இரு மொழி கொள்கைதான் காரணம். மக்களின் துணையோடு தமிழ்நாட்டின் உரிமையை நான் மீட்பேன். தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதிகளை மத்திய அரசு குறைக்கப் பார்க்கிறது. எனவே நாளை மறுநாள் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
- எந்த கட்சியும் கவுரவம் பார்க்க வேண்டாம். கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.
நாகையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
* இதில் எந்த கட்சியும் கவுரவம் பார்க்க வேண்டாம். கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.
* அனைத்து கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்க கூடாது.
* தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை பறிக்க பார்க்கிறது பா.ஜ.க.
* பிள்ளைப்பேற்றை தள்ளிப்போடாமல் குழந்தையை பெற்றுக்கொள்ளுங்கள்.
* மக்கள்தொகை அதிகரித்தால் தான் எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரும் என்று திருமண விழாவில் மணமக்களுக்கு அவர் அறிவுரை கூறினார்.
- கவுதமன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
- 105 பஸ் போக்குவரத்துகளையும் தொடங்கி வைத்தார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அப்படி செல்லும் போது 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு தி.மு.க.வினரை தயார்படுத்தும் வகையில் கட்சி பணிகளையும் மேற்கொள்கிறார்.
ஆட்சிப்பணி, கட்சிப்பணி இரண்டையும் ஒருங்கே செய்து வரும் அவரது நடவடிக்கைகள் தி.மு.க. வினரையும், அதிகாரிகளையும் சுறுசுறுப்பாக மாற்றி உள்ளது.
அந்த வகையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். பிறகு அவர் திருச்சியில் இருந்து காரில் நாகை மாவட்டத்துக்கு சென்றார்.
நாகை மாவட்ட எல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அவர் அங்கு அரசு சுற்றுலா மாளிகையில் இரவில் தங்கி ஓய்வு எடுத்தார்.
இன்று (திங்கட்கிழமை) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதற்காக அவர் அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
நாகை தம்பித்துரை பூங்காவில் இருந்து புத்தூர் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.
சில இடங்களில் அவர் சாலையில் நடந்து சென்று மக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டார். மக்களிடம் அவர் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
அதன்பிறகு நாகையில் நடந்த விழாவில் 38 ஆயிரத்து 956 பயனாளிகளுக்கு ரூ.200 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரத்து 700 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 105 பஸ் போக்குவரத்துகளையும் தொடங்கி வைத்தார்.
முன்னதாக நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் நாகையில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. கட்சி அலுவலகமான தளபதி அறிவாலயத்தையும் திறந்து வைத்தார்.
- அமைச்சர் அன்பில் மகேஷ் நாகை நகராட்சியில் உள்ள நடராஜன் தமயந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
- என்ன படித்தீர்களோ அதை தான் கேட்கப்போகிறார்கள்... பதட்டமில்லாமல் ஹாப்பியா எழுதுங்கள்.
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாகை நகராட்சியில் உள்ள நடராஜன் தமயந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகளை பார்வையிட்டார். இதையடுத்து தேர்வெழுதும் மாணவ-மாணவிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
குட்மார்னிங்..
டென்ஷன் இல்லாமல் எழுத வேண்டும்.
என்ன படித்தீர்களோ அதை தான் கேட்கப்போகிறார்கள்... பதட்டமில்லாமல் ஹாப்பியா எழுதுங்கள்.
முதலமைச்சரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள். உற்சாகமாக எழுதுங்கள்.. நல்லா எழுதுங்க.. ஆல் தி பெஸ்ட் என்று வாழ்த்தினார்.
- கடல் உள்பகுதியில் சீற்றமாக காணப்படுகிறது.
- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்களில் கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.
மேலும் கடல் உள்பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் இன்று 3-வது நாளாகமீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதனால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலமாக வாவல் காலா, ஷீலா, திருக்கை, நண்டு, இறால் உள்ளிட்டஅனைத்து வகையான மீன்களும் கிடைத்து வந்தன. மீனவர்களுக்கு நல்ல விலையும் கிடைத்து வந்தது.
இதனால் அதிகப்படியான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்தனர். இந்நிலையில் 3 நாட்களாக கடற்கரைப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வில்லை.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- பக்தர்கள் சிவகோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
ராமேஸ்வரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. 12 ஜோதி லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் 8-ம் நாளான நேற்று காலை நடராஜர் கேடயத்தில் புறப்பாடாகி எழுந்தருளினார். மாலையில் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்தனர்.
சிவராத்திரியான இன்று கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு ராமநாத சுவாமிக்கும்-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றன. தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றன.
சிகர நிகழ்ச்சியான மகாசிவராத்திரி தேரோட்டம் காலை 9 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் சிவகோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு சுவாமி-அம்பாள் மின் அலங்காரத்துடன் கூடிய வெள்ளி ரதத்தில் வீதி உலா வருகின்றனர். நாளை (27-ந்தேதி) காலை இந்திர விமானத்தில் வீதி உலாவும், பிற்பகல், மாலையில் தங்க ரிஷப வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளு கின்றனர்.
28-ந்தேதி இரவு பிச்சாடனர் எழுந்தருளர் நிகழ்ச்சியும், 1-ந்தேதி சண்டிகேஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் பாரதி, செயல் அலுவலர் சிவராம்குமார், உதவி ஆணையர் ரவீந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதனால் கோவில் நடை இரவு முழுவதும் திறந்திருக்கும்.
- மார்ச் 1-ந் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும்.
- சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியா பாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ந்தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன்துறைமுகத்துக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. வாரத்தில் 2 நாட்களுக்கு கப்பல் இயக்கப்பட்டு வந்தது.
பின்னர் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து இம்மாதம் 22-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை 7.30 மணிக்கு நாகையில் கிளம்பி 11.30 மணிக்கு காங்கேசன் துறைமுகத்தை அடையும் கப்பல், அங்கிருந்து மறுமார்க்கத்தில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு நாகையை வந்தடைந்தது. இதனை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 28-ந்தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படியே நேற்று முன்தினம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த காற்று வீசி வருகிறது.
மோசனமான வானிலை காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இன்று 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், மார்ச் 1-ந் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என்றும் கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாகை-இலங்கை இடையே நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து தொடங்கி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.