என் மலர்
தமிழ்நாடு

நாகையில் ரூ.12 கோடியில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்

- நாகப்பட்டினம் நகராட்சி கட்டிடம் ரூ. 4 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
- இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நாகப்பட்டினம்:
நாகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
13 பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் ஏராளமானார் பலன் அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்திற்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
வேதாரண்யம் தலைஞாயிறு பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை 420 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். விழுந்தமாவடி, வானமா மாகாதேவி பகுதிகளில் ரூ. 12 கோடி மதிப்பில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும். 3 பல்நோக்கு பஸ் நிலையம் அமைக்கப்படும்.
நாகப்பட்டினம் நகராட்சி கட்டிடம் ரூ. 4 கோடி செலவில் புனரமைக்கப்படும். நாகையில் 3 தளங்கள் கொண்ட பேரிடர் மையங்கள் அமைக்கப்படும். ரூ. 65 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் சென்னையில் அமைக்கப்படும்.
இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு பார்க்க வேண்டும். தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை பேரிடர் நிதியை கூட மத்திய அரசு தருவதில்லை. பள்ளிக்கல்வி க்கான நிதியையும் தருவதில்லை. மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தருவோம் என்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சி, தனித்துவம் பிடிக்காததால் இப்படி செய்கிறார்கள்.
இந்தி திணிப்பை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். குழந்தைகள் கூட தங்களது சேமிப்பை கல்வி நிதிக்கு தருகிறார்கள். அவர்களது இந்த செயலை காணும் போது கண் கலங்குகிறது.
தமிழ்நாடு முன்னேறியதற்கு இரு மொழி கொள்கைதான் காரணம். மக்களின் துணையோடு தமிழ்நாட்டின் உரிமையை நான் மீட்பேன். தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதிகளை மத்திய அரசு குறைக்கப் பார்க்கிறது. எனவே நாளை மறுநாள் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.